உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் தமிழகத்திலிருந்து சுற்றுலா சென்ற 30 பேர் சிக்கிக் கொண்டதாக கூறப்பட்ட நிலையில் தமிழக அரசு எடுத்த துரித நடவடிக்கை காரணமாக தற்போது அவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் மீட்கப்பட்ட ஒரு தமிழரிடம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சிதம்பரத்திலிருந்து உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ஆன்மீக சுற்றுலாவுக்கு 30 தமிழர்கள் சென்ற நிலையில் அவர்களுடைய வேன் நிலச்சரிவு ஏற்பட்டதன் காரணமாக சிக்கிக்கொண்டது. இதன் காரணமாக 30 தமிழர்கள் தவித்துக் கொண்டிருந்த நிலையில் தான் இது குறித்து தகவல் அறிந்த தமிழக அரசு உடனடியாக உத்தரகாண்ட் மாநில அரசிடம் தொடர்பு கொண்டு 30 தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தியது.
தமிழக அரசின் வேண்டுகோளின்படி தற்போது உத்தரகாண்ட் மாநில அரசு ஹெலிகாப்டர் மூலம் 10 தமிழர்களை மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்துள்ளதாகவும் மீதமுள்ள 20 தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தனது சமூக வலைத்தளத்தில் உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய தமிழர் ஒருவரிடம் பேசியதாக கூறி கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:
உத்தராகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய தமிழர்களை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். அங்கு பாதுகாப்பாக உள்ள தமிழர்களில் ஒருவரான திருமிகு. பராசக்தி அவர்களைத் தொடர்பு கொண்டு பேசினேன். பாதிக்கப்பட்டுள்ளவர்கள் நலமுடன் தங்களது ஊருக்குத் திரும்ப அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம்!