கும்பகோணம் மாநகராட்சி கூட்டத்தில் காங்கிரஸ் மேயருக்கும், திமுக கவுன்சிலருக்கும் மோதல் ஏற்பட்ட நிலையில், மேயர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், தான் தாக்கப்பட்டதாக திமுக கவுன்சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் வெளியாகி உள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கும்பகோணம் மாநகராட்சி மேயராக காங்கிரஸ் கட்சியின் சரவணன் பதவி வகுத்து வருவதை முன்னிட்டு, இவருக்கும் திமுக கவுன்சிலர்களுக்கும் கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், நேற்று நடந்த கூட்டத்தில் மேயர் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். இதில் 54 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இது குறித்த கோப்புகளை திமுக கவுன்சிலர் தட்சிணாமூர்த்தி கேட்டபோது, கூட்டம் முடிந்து விட்டதாக கூறி மேயர் அறைக்கு சென்று விட்டார். இதை அடுத்து, வேகமாக ஓடி சென்ற தட்சிணாமூர்த்தி, மேயர் அறை முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் திடீரென மேயர் சரவணன் தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக அலறினார்.
இதனை அடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், திமுக கவுன்சிலர் தட்சிணாமூர்த்தி தனியார் மருத்துவமனையில் சேர்ந்தார். காங்கிரஸ் மேயர் சரவணன் மற்றும் திமுக கவுன்சிலர் தட்சிணாமூர்த்தி ஆகிய இருவரும் போட்டி போட்டுக் கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.