முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் நேற்று காலமான நிலையில், அவரது இறுதி சடங்கு நடப்பது எப்போது? என்பது குறித்து அறிவிப்பை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், வயது மூப்பு காரணமாக உடல்நல பாதிப்பு ஏற்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பில் இருந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 92.
இந்த நிலையில், மன்மோகன் சிங் மறைவு குறித்து செய்தி அறிந்த சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று, அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மேலும், பிரதமர் மோடி , முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்பட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
மன்மோகன் சிங் உடல் தற்போது அவருடைய வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அவரது இறுதி சடங்கு நாளை, அதாவது டிசம்பர் 28 ஆம் தேதி நடைபெறும் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் வேணுகோபால் தெரிவித்துள்ளார். முழு அரசு மரியாதை உடன் மன்மோகன் சிங் இறுதி சடங்கு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.