Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

Mahendran
வெள்ளி, 29 நவம்பர் 2024 (15:51 IST)
பால் உற்பத்தியில் தமிழக அரசு சாதனை செய்திருப்பதாக தமிழக அரசு கூறுவது தமிழக மக்களை ஏமாற்றும் மிகப்பெரிய மோசடி என பால் நுகர்வோர்கள் சங்கம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நல சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தின் பால் உற்பத்தி தொடர்பாக ‘கிராம பொருளாதாரத்தை உயர்த்தும் திராவிட மாடல் அரசின் திட்டங்களால் பால் உற்பத்தியில் வரலாறு படைக்கும் தமிழ்நாடு’ எனும் தலைப்பில் கடந்த 27.11.2024 அன்று பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிக்கை ‘பழைய மொந்தையில் புதிய கள்’ என்கிற சொலவடையை நினைவூட்டுவதாக அமைந்துள்ளது.

கடந்த நவம்பர் 26-ம் தேதி தேசிய பால் தினத்தை முன்னிட்டு மத்திய அரசின் கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் ராஜஸ்தான் (14.51 %), மேற்கு வங்கம் (9.76%), ஜார்கண்ட் (9.04%), மத்தியப் பிரதேசம் (8.91 %), சத்தீஸ்கர் (8.62%) அஸ்ஸாம் (8.53%) குஜராத் (7.65 %) ஆகிய மாநிலங்கள் இந்திய அளவிலான பால் உற்பத்தியில் முன்னணியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உலகளாவிய பால் உற்பத்தியில் இந்தியா சுமார் 239.30 மில்லியன் டன் பால் உற்பத்தி செய்து 25% பங்களிப்போடு முதலிடத்தில் இருந்தாலும் கூட இந்தியாவின் ஒட்டுமொத்த பால் உற்பத்தியானது கடந்த 2021-202 நிதியாண்டோடு (5.77%) ஒப்பிடுகையில் 2022-2023 நிதியாண்டின் வளர்ச்சி 3.83% ஆகவும், 2023-2024 நிதியாண்டின் வளர்ச்சி 3.72% ஆகவும் சரிவடைந்துள்ளது என்பதை நடப்பாண்டின் தேசிய பால் தினத்தில் மத்திய கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ராஜிவ் ரஞ்சன் சிங் தெளிவாக குறிப்பிட்டிருக்கும் போது தமிழகம் மட்டும் பால் உற்பத்தியில் வரலாறு படைப்பதாக கூறுவது வியப்புக்குரியதாகும்.

அதுமட்டுமின்றி NDDB என்று அழைக்கப்படும் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் அதன் இணையதளத்தில் (https://www.nddb.coop/information/stats/milkprodstate) வெளியிடப்பட்டுள்ள 2001-2002 நிதியாண்டு முதல் 2022-2023 நிதியாண்டு வரை இந்தியா முழுமைக்குமான பால் உற்பத்தி குறித்த தரவுகளை பார்க்கும் போது அதில் தமிழகம் முதல் பத்து இடங்களுக்குள் வரவில்லை என்பதும், ஒட்டுமொத்த பால் உற்பத்தியில் பின்தங்கிய மாநிலங்களோடு மட்டுமே தமிழகம் தவழ்ந்து வருவதும் தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

குறிப்பாக, 2022 - 2023 நிதியாண்டின் அடிப்படையில் ஒட்டுமொத்த இந்தியாவின் பால் உற்பத்தியில் 36.242 மில்லியன் டன் பால் உற்பத்தி செய்து முதல் இடத்தில் உத்தரப்பிரதேசமும், 2ம் இடத்தில் ராஜஸ்தான் (33.307 மில்லியன் டன்), 3ம் இடத்தில் மத்திய பிரதேசம் (20.122 மில்லியன் டன்), 4ம் இடத்தில் குஜராத் (17.281 மில்லியன் டன்), 5ம் இடத்தில் ஆந்திரா (15.448 மில்லியன் டன்), 6வது இடம் மகராஷ்டிரா (15.042 மில்லியன் டன்), 7வது இடம் பஞ்சாப் (14.301 மில்லியன் டன்), 8வது இடம் கர்நாடகா (12.829 மில்லியன் டன்), 9வது இடம் பிஹார் (12.503 மில்லியன் டன்), 10வது இடம் ஹரியானா (11.966 மில்லியன் டன்) என இருக்கும் நிலையில் தமிழ்நாடு முதல் பத்து இடங்களை கடந்து 10.317 மில்லியன் டன் பால் உற்பத்தி செய்து பதினோராவது இடத்தில் தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படியானால் ஒட்டுமொத்த இந்தியாவின் பால் உற்பத்தியில் 10.317மில்லியன் டன் பால் உற்பத்தி செய்து பதினோராவது இடத்தில் இருக்கும் தமிழகம் திமுக ஆட்சியில் வரலாறு படைப்பதாக பால்வளத்துறை அமைச்சர் கூறுவது தமிழக மக்களை ஏமாற்றும் மிகப்பெரிய மோசடியான செயல் மட்டுமின்றி எதிர்க்கட்சிகள் கூறுவது போல் இது விளம்பர மாடல் அரசு என்பதை இந்த நிகழ்வு உறுதி செய்கிறது.

தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் மாநில அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவின் பால் கொள்முதலிலும், பால், பால் சார்ந்த உபபொருட்களின் உற்பத்தி படுபாதாளத்துக்கு சென்று தற்போது கொஞ்சம், கொஞ்சமாக மீண்டு வந்தாலும் கூட ஆவின் பால் பொருட்களுக்கு சென்னை போன்ற பெருநகரங்களில் தொடர்ந்து தட்டுப்பாடு நிலவி வருவதால் நந்தினி, அமுல் போன்ற மற்ற மாநிலங்களின் கூட்டுறவு பால் நிறுவனங்கள் மற்றும் தனியார் பால் நிறுவனங்களின் பால் பொருட்களின் விற்பனையை அதிகரித்துள்ளது.

ஆவினில் பால் கொள்முதல் தொடங்கி விநியோகம் வரையிலும் தலை விரித்தாடும் ஊழல், முறைகேடுகளை மறைக்கவும், செயலிழந்து போன பால்வளத்துறையை மிகைப்படுத்தி காட்டுவதற்காகவும் முதல்வர் மூலமாக தவறான புள்ளி விவரங்களை கொண்டு கடந்த ஜூன் மாதம் அறிக்கை வெளியிட்ட நிலையில் மீண்டும் அதே அறிக்கையை பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வெளியிட்டிருப்பதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வன்மையாகக் கண்டிப்பதுடன் அரசுக்கு தவறான தகவல்களை அளித்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறது.

ஒட்டுமொத்த இந்தியாவின் பால் உற்பத்தியில் 10.317 மில்லியன் டன் பால் உற்பத்தி செய்து இந்திய அளவில் பதினோராவது இடத்தில் இருப்பது தான் ஆவினின், திராவிட மாடல் அரசின் மகத்தான சாதனையா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என தமிழக அரசையும், முதல்வர் மு.க.ஸ்டாலினையும், பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனையும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

பால்வளத்துறை மற்றும் ஆவின் அதிகாரிகள் ஏற்கனவே இதற்கு முன்னால் இருந்த இரண்டு அமைச்சர்களுக்கு தவறான தகவல்களை பகிர்ந்ததை உண்மை என நம்பி செயல்பட்டதாலேயே அவர்கள் இருவரும் அமைச்சர் பதவியை இழக்க நேரிட்டது. எனவே தற்போதைய பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் முன்பு போலவே தவறான தகவல்களை அதிகாரிகள் வழங்கி வருவதை காணும் போது இவரையும் காவு வாங்க முடிவு செய்து விட்டனரோ? என்கிற சந்தேகம் எழுகிறது.

எனவே பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் இனியாவது பால்வளத்துறை மற்றும் ஆவின் அதிகாரிகளிடம் மிகுந்த எச்சரிகையோடும், கவனமுடனும் இருந்து அதிகாரிகள் தரும் புள்ளி விவரங்கள், தகவல்களை நன்றாக ஆய்வுக்குட்படுத்தி செயல்படுமாறு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்துகிறது.” என்று அவர் கூறியுள்ளார்.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிகிரி படிப்பை முன்கூட்டியே முடிக்கலாம்.. 3 வருடம் தேவையில்லை! - UGC அளித்த ஒப்புதல்!

காங்கிரஸ் உறவை துண்டிக்க வேண்டும்: உத்தவ் தாக்கரேவுக்கு சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் நெருக்கடி?

மருத்துவமனைக்குள் நுழைந்து பெண் டாக்டர் மீது தாக்குதல் நடத்தியவர் கைது: குடும்ப சண்டையா?

சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே மெமு ஏ.சி. ரயில்: தெற்கு ரயில்வே தகவல்..!

ஃபெங்கல் புயல்: இன்றும் நாளையும் அதி கனமழை: 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments