ஓசூரில் பிரசவத்திற்காக வந்த பெண்ணுக்கு அனுபவமற்ற செவிலியர்கள் பிரசவம் பார்த்ததால் குழந்தைக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓசூர் அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்றில் வசந்தா என்ற பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் பிரசவ வலியில் இருந்த நேரம் அங்கு மருத்துவர் இல்லை என கூறப்படுகிறது. இதனால் அங்கிருந்த செவிலியர்கள் சிலர் சேர்ந்து வசந்தாவுக்கு பிரசவம் பார்த்துள்ளனர்.
வசந்தாவுக்கு குழந்தை பிறந்த நிலையில் செவிலியர்ள் பயிற்சி இல்லாமல் பிரசவம் பார்த்ததால் குழந்தைக்கு கை, கால்களில் முறிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதை உறவினர்களுக்கு தெரிவிக்காமல் செவிலியர்கள் வசந்தாவை ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அங்கு குழந்தையை பரிசோதித்த போது குழந்தைக்கு கை, கால் எலும்புகள் 3 இடங்களில் முறிந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டம் நடத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு எழுந்துள்ளது.