மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தக்கார் கருமுத்து கண்ணன் மறைவுக்கு முதல்வர் முக. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில், "மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலின் தக்கார் திரு. கருமுத்து கண்ணன் அவர்கள் மறைந்த செய்தியால் அதி்ர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்" என தெரிவித்துள்ளார்.
தமிழ் திரைப்பட பாடலாசிரியரும் கவிஞருமான வைரமுத்து தன் டுவிட்டர் பக்கத்தில்,
''இதயத்தை
இடம்மாற்றிப்போடும் செய்தி
மதுரையில் என் நண்பர்
கருமுத்து கண்ணன்
காலமாகிவிட்டார்
ஒரு கல்வித் தந்தை
ஒரு தொழிலரசர்
ஒரு சமூக அக்கறையாளர்
மீனாட்சியம்மன் கோயில் தக்கார் என்று மரணம் ஒரே கல்லில்
பல கனிகளை அடித்துவிட்டதே!
அனைவர்க்கும்
என் ஆழ்ந்த ஆறுதல்
எனக்கு யார் சொல்வது?'' என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல், முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மதுரை தியாகராசர் கலைக்கல்லூரி, தியாகராசர் பொறியியல் கல்லூரி மற்றும் பல கல்வி நிறுவனங்களின் தாளாளராக கல்வித் தொண்டாற்றியவரும், மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் தக்காராக பல்வேறு ஆன்மீக பணிகளை செய்தவரும், மதுரையின் தொழில் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவரும்,
மாண்புமிகு அம்மா அவர்களின் அன்பைப் பெற்றவருமான உயர்திரு திரு. கருமுத்து தி. கண்ணன் அவர்கள் மரணமடைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்,
மதுரை மீனாட்சியம்மன் கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள சித்திரை வீதிகளை புனரமைப்பதிலும், செயற்கரிய அறசெயல்கள் பல செய்து நீங்கா புகழ்பெற்ற திரு.கருமுத்து கண்ணன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.