சென்னையின் முதல் ஏசி ரயில் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ள நிலையில், இனி பயணிகள் குளுகுளுவென வசதியான பயணத்தை அனுபவிக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையின் முக்கிய போக்குவரத்து முறை மின்சார ரயிலாகும் என்பதும், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் தினமும் இந்த மின்சார ரயிலையே பயணம் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் ஏசி வசதி கொண்ட விரைவு மின்சார ரயிலை இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டு, அதற்கான பணிகள் முடிக்கப்பட்டன. அதன் அடிப்படையில், இன்று முதல் இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரையிலிருந்து இன்று காலை 7 மணிக்கு ஏசி ரயில் சேவை துவங்கியது. தானியங்கி கதவுகள், கண்காணிப்பு கேமராக்கள், பயணிகளுக்கான தகவல் அமைப்பு உள்ளிட்ட நவீன வசதிகள் இந்த ரயிலில் உள்ளன. ஞாயிறு தவிர மற்ற அனைத்து நாட்களிலும் இந்த ரயில் இயக்கப்படும் என்றும், சென்னை கடற்கரையிலிருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டுக்கு 8:35 மணிக்கு சென்றடையும் என்றும், மறு மார்க்கமாக செங்கல்பட்டில் இருந்து 9:00 மணிக்கு புறப்பட்டு 10:30 மணிக்கு கடற்கரைக்கு வந்தடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், மாலை 3:45 மணிக்கு ரயில் சென்னையிலிருந்து புறப்பட்டு 5:25 மணிக்கு செங்கல்பட்டுக்கு செல்லும். மாலை 5:45 மணிக்கு செங்கல்பட்டிலிருந்து புறப்பட்டு 7:15 மணிக்கு கடற்கரையை வந்தடையும்.
இந்த ரயில், சென்னை கோட்டை, பூங்கா, எழும்பூர், மாம்பழம், கிண்டி, பரங்கிமலை, திரிசூலம், தாம்பரம், பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி, சிங்கப்பெருமாள் கோயில் மற்றும் பரனுர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.