சென்னையில் கலவரம் இப்படித்தான் உருவாகியது: ஊடகத்தை அனுமதிக்காமல் கதையை முடித்த காவல்துறை!
சென்னையில் கலவரம் இப்படித்தான் உருவாகியது: ஊடகத்தை அனுமதிக்காமல் கதையை முடித்த காவல்துறை!
உலகமே போற்றி புகழ்ந்த மாணவர்கள், இளைஞர்களின் அறப்போராட்டத்தில் எந்த அளவுக்கு வன்முறையை கையாண்டு போராட்டத்தை சிதைக்க முடியுமோ அதனை செய்துவிட்டது தமிழக அரசும், காவல்துறையும்.
அறவழியில் போராடி மகத்தான வெற்றி பெற்ற மாணவர்கள் தங்கள் வெற்றியை கொண்டாட வேண்டிய நேரத்தில் காவல்துறையின் தடியடியால் வேதனையில் துடித்துக்கொண்டிருந்தனர். உடல் வேதனையல்ல மன வேதனையால். இத்தனை நாள் போராட்டத்தை அறவழியில் நடத்தினோம் ஆனால் அதனை அறவழியில் முடிக்க காவல்துறை உதவவில்லையே என்றுதான்.
தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டம் குறித்து நேற்று காலை காவல்துறை மெரினா கடற்கரையில் இருந்த மாணவர்களிடம் விளக்கி கூறியது. ஆனால் அது குறித்து முடிவெடுத்து சட்டம் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வாக இருக்குமா என்பதை ஆலோசிக்க சில மணி நேரங்களை கேட்ட மாணவர்களை அனுமதிக்காமல் அரஜாகத்தை தொடங்கியது.
வலுக்கட்டாயமாக இழுத்து வெளியேற்ற தொடங்கியது காவல்துறை. மறுத்தவர்களை லத்தி மூலம் பதம் பார்த்தனர். போலீஸின் லத்திக்கு ஆண், பெண் என்ற எந்த வேறுபாடும் தெரியவில்லை. போலீஸின் தாக்குதலுக்கு ஆளானவர்கள் அருகில் உள்ள மீனவ குப்பங்களுக்குள் ஓடினர். ஆனால் விடாமல் ஓடி விரட்டி விரட்டி தாக்கினர் போலீசார். இதனால் பெரும்பாலும் பாதிக்கப்பட்டது மீனவ குப்பங்கள் தான்.
இதனையடுத்து சமூக விரோதிகளால் காலையிலேயே ஜஸ் ஹவுஸ் காவல் நிலையம் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இதனை செய்தது மாணவர்கள் இல்லை என காவல்துறையே நீதிமன்றத்தில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் அருகில் உள்ள குப்பங்களை சேர்ந்த இளைஞர்களை போலீசார் தேடப்பட்டனர்.
நடுக்குப்பத்தின் ஒவ்வொரு வீட்டிலும் அத்துமீறி நுழைந்த போலீசார் இளைஞர்கள் யாராவது இருக்கிறார்களா என லத்தி வீசி தேடினர். ஆனால் அங்கிருந்த வண்டிகள், பெண்களை கடுமையாக தாக்கினர் போலீசார். நடுக்குப்பத்தில் போலீஸ் அராஜகம் நடந்துகொண்டிருக்கும்போது நொச்சிக்குப்பத்தில் இருந்த ஆண்கள் கடல்வழியே மெரினா கடற்கரையில் போராட்டம் நடக்கும் இடத்தை அடைந்தனர்.
இந்த நேரத்தில் தான் நடுக்குப்பம் மீன் மார்கெட்டில் தீப்பற்றி எரிந்தது. மீன் மார்க்கெட் எரிந்ததில் வெளியான கரும்புகை அந்த இடத்தையே போராட்ட மேகமாக சூழ்ந்தது. ஆனால் ஊடகங்கள் எதுவும் அங்கு அனுமதிக்கப்படவில்லை. தடைகளை தாண்டி சென்ற பிபிசி தொலைக்காட்சியின் கேமரா மற்றும் கேமரா மேனும் போலீசால் கொடூரமாக தாக்கப்பட்டார்.
மீன் மார்க்கெட் மொத்தமாக எரிந்து நாசமாக போலீஸிடம் மனிதர்கள் யாரும் சிக்காததல் போலீஸ் வாகனம் முழுவதும் போலீஸை நிரப்பிக்கொண்டுக் நேராக நொச்சிக்குப்பம் பகுதியில் இறங்கி லைட் ஹவுஸுக்குப் பின்னால் வரிசை கட்டினார்கள். அங்கிருந்த பெண்களுக்கு பின்னால் இளைஞர்கள் நின்று கொண்டிருந்தனர். அறவழியில் போராடிய இளைஞர்களை ஏன் தாக்குகிறீர்கள் என கேட்டு சாபமிட்டனர் அவர்கள்.
இப்படி போலீஸின் அராஜகம் ஒருபக்கம் நடந்துகொண்டிருக்க ராயப்பேட்டை ஜாம்பஜார் காவல் நிலையத்தை மர்ம நபர்கள் தீவைத்தார்கள். தீ வைத்த மர்ம நபர்கள் யார் என்ற வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியானது.
ஊடகங்களை சில இடங்களில் காவல்துறை அனுமதிக்கவில்லை. இதனால் செய்வதறியாமல் நின்றன ஊடகங்கள். சென்னை மெரினா கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் நடந்த கலவர காட்சிகள் தொலைக்காட்சிகளில் இருட்டடிப்பு செய்யப்பட்டது. மதுரை, கோவை போன்ற பகுதிகளில் போலீஸ் நடத்திய தாக்குதல்கள் மட்டும் ஒளிபரப்பப்பட்டன.
ஆட்டோவுக்கு தீ வைக்கும் காட்சியை செய்தி சேனல் ஒன்று வெளியிட்டதும் அனைத்து மீடியாக்களும் சென்னை மெரினாவிலிருந்து பறந்துசென்றன. ஆனால், அதற்குள்ளாக பெரும்பான்மையான பகுதிகளில் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தியிருந்தது காவல்துறை.
ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்திய அனைத்து இடங்களிலும் போலீசார் தடியடி நடத்தி அராஜகம் செய்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஆண்களை விட பெண்கள் கடுமையாக தாக்கப்பட்டனர். மக்கள் மீது அரசு நடத்திய வன்முறையாகவே இதனை பொதுமக்கள் பார்க்கின்றனர். இந்த காட்சிகளை நேற்று தொலைக்காட்சியில் பார்த்த பொதுமக்கள் காவல்துறையை கடுமையாக வசைபாடினர்.