செய்தியாளர் சந்திப்பில் பத்திரிக்கையாளர்கள் குறித்து அவதூறாக பேசிய எச்.ராஜாவுக்கு சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழக பாஜகவில் மூத்த தலைவராக உள்ள எச்.ராஜா அவ்வபோது தகாத வார்த்தைகளில் பேசுவது அடிக்கடி ட்ரெண்டாகி வந்தது. இந்நிலையில் சமீபத்தில் ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் ஊடகங்களை மிகவும் தவறான வார்த்தைகளில் அவர் விமர்சித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
எச்.ராஜாவின் இந்த செயல் குறித்து கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் “எச்.ராஜா மட்டுமல்ல வேறு சிலரும் , செய்தியாளர்கள் மற்றும் ஊடகத்துறையினர் மீது அவதூறு , நேர்மையற்ற விமர்சனங்கள், அநாகரிகச் சொற்களைப் பயன்படுத்தும் போக்கு அதிகரித்துள்ளது. இது கண்டிக்க மட்டுமல்ல தடுத்து நிறுத்தப்பட வேண்டும்” என்று கூறியுள்ளது.
மேலும் “பத்திரிகையாளார்கள், ஊடகங்கள் விமர்சனங்களுக்கு உட்பட்டதே. ஆனால், அவை நேர்மையானதாக, தரமானதாக இருக்கட்டும். மாறாக, அவதூறுகளால், மிரட்டல்கள், வாய்ப்பூட்டு போட நினைத்தால் அது ஒருபோதும் நடக்காது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.