சென்னையில் பல நகை அடகுக்கடைகளில் போலி நகைகளை கொடுத்து பணம் வாங்கி ஏமாற்றிய சீரியல் நடிகை கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள பெரம்பூரில் பட்டேல் ரோடு பகுதியில் அடகுக்கடை நடத்தி வருபவர் கண்ணையா லால். சமீபத்தில் இவரது கடைக்கு பெண் ஒருவர் நகை அடகு வைக்க வந்துள்ளார். தாலியில் உள்ள குண்டுகளை அடமானம் வைத்து ரூ.40 ஆயிரம் கேட்டுள்ளார். அதை சோதித்து பார்க்க கண்ணையா லால் முயன்றபோது தாலி நகையை உரசினால் சேதமடையும் என செண்டிமெண்டாக பேசியுள்ளார். இதனால் நகையை சோதனை செய்யாமல் பணம் அளிக்க அவர் சம்மதித்து ஆதார் அட்டை நகல் கேட்டுள்ளார். ஆனால் அந்த பெண்மணி நகல் எடுத்து வராததால் ரூ.20 ஆயிரம் கொடுத்த அவர் மீதம் ரூ.20 ஆயிரத்தை மறுநாள் ஆதார் நகல் கொடுத்துவிட்டு வாங்கி செல்லும்படி கூறியுள்ளார்.
ஆனால் மறுநாள் அந்த பெண் வரவே இல்லை. இதனால் அந்த பெண் கொடுத்த நகையை சோதித்தபோது அது போலி என தெரிய வந்துள்ளது. இதுகுறித்து உடனடியாக காவல்துறையில் புகார் அளித்த அவர், அந்த பெண் வந்து போன சிசிடிவி காட்சிகளை அடகுக்கடை உரிமையாளர்கள் உள்ள வாட்ஸப் க்ரூப் ஒன்றில் பகிர்ந்து மற்றவர்களை எச்சரித்துள்ளார். அப்போதுதான் அந்த பெண் மேலும் சில கடைகளிலும் இதேபோல கைவரிசை காட்டியது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் சிசிடிவி காட்சிகளை கொண்டு குற்றவாளியான மகாலெட்சுமி என்ற அந்த பெண்ணை கீழ்ப்பாக்கத்தில் கைது செய்துள்ளனர். விசாரணையில் அந்த பெண்ணுக்கு திருமணமாகி சில ஆண்டுகளில் கணவர் அவரை பிரிந்துவிட்டதும், தனது மகனின் படிப்பு செலவு உள்ளிட்டவற்றிற்காக அவர் மோசடி செயல்களில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது. பல நகைக்கடைகளில் மோசடி செய்து தன்னை ஆடம்பரமாக அலங்கரித்து கொண்ட மகாலெட்சுமி சில சீரியல்களில் ஜூனியர் ஆர்ட்டிஸ்டாகவும், சில உள்ளூர் விளம்பரங்களிலும் கூட நடித்திருந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.