கோவையில் கல்லூரி மாணவர்களை தாக்க உருட்டுக்கட்டை சகிதம் வடமாநில தொழிலாளர்கள் நுழைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை, திருப்பூர் பகுதிகளில் பல்வேறு வேலைகளிலும் வடமாநில தொழிலாளர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. தினம்தோறும் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் வேலைவாய்ப்பிற்காக தமிழகம் நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் கோவை, திருப்பூர் பகுதிகளில் தமிழர்களுக்கும், வடமாநிலத்தவருக்கும் மோதல்கள் அதிகரித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சில நாட்கள் முன்னதாக தமிழ்நாட்டு தொழிலாளர்கள் சிலரை வடமாநில தொழிலாளர்கள் ஆயுதங்களுடன் துரத்தி வந்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கோவையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் மாணவர்களுக்கும், வடமாநில தொழிலாளர்களுக்கும் ஏற்பட்ட மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனியார் கல்லூரி கேண்டீனில் வடமாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்துள்ளனர். மாணவர்களுக்கு உணவு குறைவாக வழங்கியதாக மாணவர்கள் புகார் அளித்த நிலையில், அது தொடர்பான வாக்குவாதம் மோதலில் முடிந்தது.
இந்த மோதலில் வடமாநில கேண்டீன் ஊழியர்களுக்கு சப்போர்ட்டாக வெளியிலிருந்து வேறுசில வடமாநில தொழிலாளிகள் ஆயுதங்களுடன் கல்லூரிக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணவிகள் அலறியடித்து ஓடிய நிலையில் மோதல் நிகழ்ந்துள்ளது.
உடனடியாக சம்பவ இடம் விரைந்த போலீஸார் இருதரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். இந்த மோதல் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.