வடமாநில மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் ஸ்னேக்ஸாக பானிபூரி இருக்கிறது. மாலை நேரங்களில் அதிக அளவில் இதை விரும்பி சாப்பிடுகிறார்கள். வட மாநிலங்கள் மட்டுமல்ல கடந்த பல வருடங்களாகவே தமிழக மக்களும் மாலை வேளைகளில் பானிபூரி சாப்பிடுவதை மிகவும் விரும்புகிறார்கள். எனவேதான் தமிழகத்தின் எல்லா ஊர்களிலும் பானிபூரி விற்கப்படுகிறது.
இந்நிலையில்தான் பானி பூரி சாப்பிட ஆசைப்பட்டு வாயைத் திறந்த ஒரு பெண் அதன்பின் மூட முடியாமல் தவித்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடந்திருக்கிறது. ஒளரையா மாவட்டத்தில் உள்ள திபியாபூர் என்கிற பகுதியில் வசித்து வருபவர் இன்சுலாதேவி (47). இவர் பானிபூரி வாங்கி அதை சாப்பிடுவதற்காக வாயை திறந்த போது எதிர்பாராத விதமாக அவரால் வாயை மூட முடியாம்ல் போனது.
மூட முடியாமல் அவதிப்பட்ட்ட அவரை உறவினர்கள் அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சில மருத்துவர்கள் அவரின் வாய் தாடையை மீண்டும் பழைய இடத்திற்கு கொண்டுவர முயற்சிகள் செய்தனர். ஆனால் அது முடியவில்லை.
எனவே அவர் சிச்சோலி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்குள்ள மருத்துவர்கள் அவரின் தாடையை சரி செய்தனர். பானிபூரி சாப்பிடுவதற்காக அவர் அதிக அளவில் வாயை திறந்ததால் தாடை விலகி விட்டது. சிலருக்கு இப்படி சில சமயம் நடக்கும் என்று மருத்துவர்கள் விளக்கமளித்துள்ளனர். மருத்துவர்களின் சிகிச்சையினால் வாய் மூடப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பியிருக்கிறார் இன்சுலா தேவி.