வடலூரில் சத்திய ஞானசபை நிலத்தில் வள்ளலார் சர்வதேச மையத்தில் என்னென்ன வசதிகள் செய்யப்பட உள்ளன? என விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பாஜக நிர்வாகி வினோத் ராகவேந்திரன் என்பவர் சத்தியஞான சபை முன் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க தடை விதிக்கக் கோரிய வழக்கு இன்று விசாரணை நடந்தது.
இந்த விசாரணையில் வள்ளலார் சர்வதேச மையத்தை வடிவமைக்க சர்வதேச அளவில் கோரப்பட்ட ஒப்பந்தத்தில் பங்கேற்ற ஏழு நிறுவனங்களும் தகுதியான நிறுவனங்கள் என்று தேர்வு செய்யப்பட்டது என்றும் அதன் பின்னர் மாவட்ட கலெக்டர் தலைமையில் கருத்து கேட்டு கூட்டம் நடத்தப்பட்டு வள்ளலார் சர்வதேச மையம் 100 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது என்றும் தமிழ்நாடு அரசு தரப்பில் கூறப்பட்டது
மேலும் சர்வதேச மையம் அமைத்தாலும் அந்த நிலம் ராமலிங்க அடிகளார் அறக்கட்டளை வசம் இருக்கும் என்றும் அடிப்படை வசதிகள் இல்லை என பக்தர்கள் தரப்பில் கோரிக்கை வந்தால் வசதிகள் அமைத்து கொடுக்கப்படும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது
இதை அடுத்து வள்ளலார் சர்வதேச மையத்தில் என்னென்ன வசதிகள் செய்யப்பட உள்ளன என்பது குறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் இந்த வழக்கை ஏப்ரல் 24 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.