சென்னையில் கிரிக்கெட் வீரர் அஸ்வின் வசிக்கும் சாலைக்கு அவரது பெயரை வைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை மேற்கு மாம்பலத்தில், ராமகிருஷ்ணபுரம் 1ஆம் தெருவில் அஸ்வின் வசித்து வரும் நிலையில், அந்த சாலைக்கு "அஸ்வின் சாலை" என்று பெயர் சூட்ட சென்னை பெருநகர மாநகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
அஸ்வினுக்கு சொந்தமான நிறுவனம் ஒன்று, இந்த பெயர் மாற்ற திட்டம் குறித்து சென்னை மாநகராட்சிக்கு கோரிக்கை வைத்தது. இந்த கோரிக்கை தற்போது ஏற்று கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அஸ்வின் பெயரை, ஆரிய கவுடா சாலை அல்லது ராமகிருஷ்ணபுரம் 1ஆம் தெருவுக்கு வைக்க கோரிக்கை வைக்கப்பட்டதாகவும், சென்னை மாநகராட்சி இதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ பெயர் மாற்றம் விரைவில் நடைபெறும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட்டில் தனது சிறந்த பங்களிப்பை அளித்த அஸ்வினுக்கு, கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. அதனை தொடர்ந்து, தற்போது சென்னை மாநகராட்சியும் அவரது பெயரை ஒரு சாலைக்கு வைத்து கௌரவிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.