அக்பர், சிவாஜி ஆகியோரால் கூட தமிழ்நாட்டை வெல்ல முடியவில்லை என சட்டமன்றத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டப்பேரவையில் இன்று பேசிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, வடக்கில் இருந்து வரக்கூடிய எந்த ஒரு ஆதிக்கத்திற்கும் வரலாற்றில் எந்த காலகட்டத்திலும் தமிழ்நாடு தலை வணங்கியது இல்லை என்றார். அவர், "அலெக்சாண்டரின் வெற்றி பாதையில் தமிழ்நாடு ஒருபோதும் இருந்ததில்லை," என்றும், "மௌரிய பேரரசர் சந்திரகுப்தரால் கூட தமிழ்நாட்டின் எல்லையை தொட்டுப் பார்க்க முடியவில்லை," என்றும் தெரிவித்தார்.
அசோக சக்கரவர்த்தியின் ஆட்சியும் தமிழ் நிலப்பரப்பில் சுழல முடியவில்லை என்றும், புத்தர்களின் காலம், சமுத்திரகுப்தனின் காலடி தமிழ் மண்ணில் கடைசி வரை பதியவில்லை என்றும் அவர் கூறினார். கனிஷ்கரின் ஆட்சி எல்லை விந்தியத்தை தாண்டவில்லை என்றும் தெரிவித்தார்.
அக்பர் பாதுஷாவின் ராஜ்ஜியம் தமிழ்நாட்டை எட்ட முடியவில்லை என்றும், "தன்னைத் தானே ஆலம்கீர் என்று அழைத்துக் கொண்ட அவுரங்கசீப்பால் கூட தமிழ்நாட்டை வெல்ல முடியவில்லை," என்றும் அவர் கூறினார். மேலும், மலை எலி என்று அழைக்கப்பட்ட மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியால் கூட தமிழ்நாட்டை ஆட்சி செய்ய முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த வரலாறு தமிழனுக்கு மட்டுமே உறுத்தான வரலாறு என அவர் பெருமிதத்தோடு கூறிய நிலையில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மேசையை தட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.