பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் போகிக்கு அதிகமான புகையை ஏற்படுத்த வேண்டாம் என சென்னை விமான நிலைய நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழகம் முழுவதும் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் முதல் நாள் போகியின் போது பழைய பொருட்களை போட்டு எரிப்பது வழக்கமாக இருந்து வருகிறது. இப்படியாக சென்னையில் கடந்த 2017, 2018 ஆண்டுகளில் குப்பைகள் அதிக அளவில் எரிக்கப்பட்டதால் ஏற்பட்ட புகை மாசுபாட்டால் விமானங்கள் தரையிறங்குவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது.
இதனால் கடந்த 2019 மற்றும் 2020ம் ஆண்டுகளில் சென்னை விமான நிலையம் அருகே உள்ள பகுதிகளில் விமான நிலைய நிர்வாகம் மேற்கொண்ட வேண்டுகோளின் விளைவாக புகை மாசு ஓரளவு குறைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டும் அதிகமான குப்பைகளை எரித்து புகை மாசு ஏற்படுத்தாமல் இருக்க விமான நிலைய நிர்வாகம் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.