மத்திய அரசின் வேளாண் சட்டம் விவசாயிகளுக்கு துரோகம் இழைப்பதாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறி வரும் நிலையில் வேளாண் சட்டம் தமிழக விவசாயிகளுக்கு பாதுகாப்பானது என தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் விவசாய சங்க பிரதிநிதிகளுடனான கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:
பொதுப்பணித்துறை சார்பாக 272 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. மழை நீர் முறையாக சேமிக்கப்படுகிறது. மத்திய அரசின் வேளாண் சட்டம் தமிழக விவசாயிகளுக்கு பாதுகாப்பானது. வியாபாரி-விவசாயி இடையே ஒப்பந்தம் விருப்ப அடிப்படையில் மேற்கொள்ளப்படும். விலையேறினாலும் விவசாயிகளுக்கு அதன் பலன் நேரடியாக கிடைக்கும்
கடைமடை வரை முழுமையாக நீர் சென்றடைகிறது. மேட்டூர் அணை நிரம்பி உபரி நீர் கடலில் வீணாக கலப்பதை தடுத்து கால்வாய் மூலம் வறட்சி பகுதிகளுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு வரும் ஜனவரியில் அடிக்கல் நாட்டப்படும். டெல்டா பகுதிகள் முழுவதும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது