Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புகையில்லாத போகி பண்டிகை கொண்டாடுவோம்.. மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள்..!

bhogi 1

Mahendran

, வியாழன், 9 ஜனவரி 2025 (16:53 IST)
தமிழக முழுவதும் போகி பண்டிகை வரும் 13ஆம் தேதி கொண்டாட இருக்கும் நிலையில் பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்துவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த செயலால் காற்று மாசுபடுகிறது என்று கூறப்படும் நிலையில் இது குறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது. அந்த செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவதுள் 
 
நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் பழைய கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகிப்  பண்டிகையினை கொண்டாடி வந்துள்ளனர்.  இயற்கை பொருள்களிலிருந்து தயாரிக்கப்பட்ட பழைய பொருள்களை தீயிட்டு கொளுத்தி வந்துள்ளனர்.  இச்செய்கையால் காற்று மாசுபடாமல் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமல் இருந்து வந்துள்ளது.
 
ஆனால் இன்றைய சூழலை எடுத்துக்கொண்டால், தற்பொழுது போகிப் பண்டிகையின் பொழுது பழைய பொருள்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருள்கள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், ரசாயணம் கலந்த பொருள்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதோடு போகி அன்று எரிக்கப்படும் பொருள்களால் ஏற்படும் அடர்ந்த புகையின் காரணமாக விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடுகளில் தாமதம் ஏற்படுகிறது.
 
சென்னை நகரில் போகி அன்று எரிக்கப்படும் மேற்படி பொருள்களால் புகை மண்டலம் ஏற்பட்டு வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படுவதோடு விபத்துகளுக்கும் காரணமாக உள்ளது.  பழைய பிளாஸ்டிக் பொருள்கள், டயர் மற்றும் டியூப் போன்றவற்றை எரிப்பதால் வெளிப்படும் நச்சு வாயுக்களால் மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்களால் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
 
இத்தகைய செயல்கள் பொது மக்களிடம் விழிப்புணர்வு இல்லாமையால் ஏற்பட்டு வந்தது. இதனை தவிர்க்க, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கடந்த 20 ஆண்டுகளாக போகிப் பண்டிகைக்கு முன் பொதுமக்களிடைய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றது.  இதன் காரணமாக கடந்த வருடங்களில் பழைய ரப்பர் பொருள்கள், பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் டயர், டியூப் போன்றவற்றை எரிப்பது பெரும்பாலும் குறைந்துள்ளது..
 
போகிப் பண்டிகையின் போது சென்னை மாநகரத்தின் சுற்றுச்சூழல் காற்று தரத்தினை கண்காணிப்பு செய்யும் பொருட்டு, வாரியம் போகிப்பண்டிகையின் முந்தைய நாள் மற்றும் போகிப்பண்டிகை நாளிலும், 15 இடங்களில் 24 மணிநேரமும் காற்றுத்தரத்தினை கண்காணிக்க காற்று மாதிரி சேகரிப்பு செய்து ஆய்வு செய்வதற்கு ஏற்பாடு செய்துள்ளது.
 
 மேலும் காற்றின் தர அளவு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படும். இந்த ஆண்டும் சுற்றுச்சூழல் மாசு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில், சென்னை மாநகரம் மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, இவ்வருடம் பொதுமக்கள் அனைவரும் பிளாஸ்டிக், டயர், ட்யூப் போன்றவற்றை எரிக்காமல் சுற்றுச்சுழலைப் பாதுகாக்கும் வகையில் போகிப் பண்டிகையைக் கொண்டாடுமாறு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.  
 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேர்தல் வந்தால் பொங்கல் பரிசுத்தொகை:சட்டமன்றத்தில் அமைச்சர் துரைமுருகன் பேச்சு..!