வேலூர் தொகுதியில் முன்னாள் திமுக அமைச்சரும் திமுக பொருளாளருமான துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் திமுக வேட்பாளராக போட்டியிடும் நிலையில் அங்கு சமீபத்தில் ரெய்டு செய்த வருமான வரித்துறையினர் துரைமுருகனுக்கு நெருக்கமானோர்களின் வீடுகளில் இருந்து கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்ததாக தகவல்கள் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆர்.கே.நகர் போல வேலூர் தொகுதியிலும் பணம் பட்டுவாடா காரணமாக தேர்தல் ரத்து செய்யப்படுமா? என்ற கேள்வி பலரது மனதில் எழுந்தது
இந்த நிலையில் சமீபத்தில் தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்த திமுகவினர், வேலூரில் தேர்தலை ரத்து செய்யக்கூடாது என்று கோரிக்கை விடுத்தனர். அதிமுக உள்பட எந்த கட்சியும் வேலூரில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பவில்லை
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், 'வேலூரில் பணப்பட்டுவாடா அதிகம் இருப்பதாக கையும் களவுமாக பிடிபட்டிருப்பதால் அங்கு தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் எனது கட்சிக்காரர்கள் பணம் கொடுத்தால் கூட நானே அவர்களை தேர்தல் அதிகாரிகளிடம் காட்டிக்கொடுப்பேன்' என்றும் அவர் கூறியுள்ளார். கமல்ஹாசனின் கோரிக்கையை ஏற்று வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்