Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குரூப் 4 தேர்வை ரத்து செய்ய வேண்டும்: ஈபிஎஸ் கோரிக்கையால் அதிர்ச்சியில் பாஸ் ஆனவர்கள்..!

Advertiesment
குரூப் 4 தேர்வு

Mahendran

, செவ்வாய், 22 ஜூலை 2025 (14:48 IST)
குளறுபடிகளின் உச்சமாக இருக்கும் குரூப்-4 தேர்வு ரத்து செய்யபட வேண்டும்; மறுதேர்வு நடத்தப்பட வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளது இந்த தேர்வில் பாஸ் ஆனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவதூ: 
 
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த 12.07.2025 அன்று நடைபெற்ற குரூப்-4 தேர்வு ஆரம்பிக்கும் முன்னரே, மதுரையில் வினாத்தாள் ஒரு தனியார் ஆம்னி பேருந்தில், முறையாக சீலிடப்படாமல், கதவின் மேல் ஒரு A4 ஷீட் ஒட்டப்பட்ட நிலையில் அனுப்பப்பட்டது சர்ச்சையானது.
 
பிறகு, தேர்வு வினாத்தாளில் பல கேள்விகள், குறிப்பாக தமிழ்ப் பாடக் கேள்விகள், Syllabus-க்கு அப்பாற்பட்டு இருந்ததாக பல்வேறு தேர்வர்கள் புகார் தெரிவித்தனர்.
 
இந்நிலையில், தற்போது, சேலத்தில் இருந்து சென்னைக்கு அனுப்பப்பட்ட விடைத்தாள்கள் அடங்கிய பெட்டிகள் முறையாக சீலிடப்படாமல், ஆங்காங்கே உடைக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வருகின்றன.
 
குரூப்-4 பதவிகள், குறிப்பாக VAO பதவி என்பது தமிழ்நாடு அரசின் வேர் போன்றது. ஜாதி மத பேதமின்றி, ஏழை எளிய பின்னணி கொண்ட மக்கள் அரசு அதிகாரிகள் ஆகவேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் மாண்புமிகு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் உருவாக்கப்பட்ட பதவி.
 
பல லட்சம் மாணவர்களின் கனவாக இருக்கக் கூடிய குரூப்-4 தேர்வு என்பது, எவ்வளவு முறையாக நடத்தப்பட வேண்டியது? 
 
ஆனால், இந்த ஸ்டாலின் மாடல் அரசோ, மெத்தனப் போக்கின் உச்சத்தில் இந்த தேர்வை நடத்தி, தேர்வர்களின் வாழ்க்கையோடு விளையாடியுள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
 
ஜூலை 12 அன்று நடைபெற்ற குரூப்-4 தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும்; உடனடியாக மறு தேர்வு வைக்க வேண்டும் எனவும், குரூப்-4 குளறுபடிகள் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
 
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாஜக கொடுத்த அழுத்தம் காரணமா? ஜெகதீப் தன்கர் திடீர் ராஜினாமா! - காங்கிரஸ் பிரமுகர் ஜெய்ராம் ரமேஷ் சந்தேகம்!