Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழக மீனவர்கள் பிடிக்கும் மீன்களை சாப்பிடலாமா? கப்பல் தீ விபத்தால் கடலில் ரசாயனம் கசிவு

தமிழக மீனவர்கள் பிடிக்கும் மீன்களை சாப்பிடலாமா? கப்பல் தீ விபத்தால் கடலில் ரசாயனம் கசிவு
, புதன், 28 ஜூலை 2021 (23:20 IST)
இலங்கையில் சரக்கு கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தை அடுத்து கடலில் கலந்த வேதிக் கழிவுகளால் இந்திய மீனவர்கள் பிடித்து வரும் மீன்களில் பாதிப்பு உள்ளதா என்று மண்டபம் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
 
1,486 சரக்கு பெட்டகங்களில் நைட்ரிக் ஆசிட் உள்பட பல்வேறு வேதிப்பொருட்களை ஏற்றிக்கொண்டு சிங்கப்பூர் நிறுவனத்துக்கு சொந்தமான எம்வி எக்ஸ்பிரஸ் என்ற சரக்கு கப்பல் கொழும்பு துறைமுகத்தை நெருங்கிய போது, கடந்த மே 23 ஆம் தேதி கப்பலில் தீ விபத்து ஏற்பட்டு எரிந்து போனது.
 
இந்தக் கப்பலில் இருந்த நைட்ரிக் அமிலம் உள்ளிட்ட வேதிப்பொருட்கள் கடலில் கலந்தது. இந்நிலையில், இலங்கை கடற்கரையில் கடந்த சில நாட்களாக சுமார் 200க்கும் மேற்பட்ட கடல் ஆமைகள், டால்பின்கள் உள்ளிட்ட கடல் உயிரிகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி வருகின்றன.
 
இலங்கை கடல் ஆராய்ச்சி வல்லுநர்கள் இந்த தீ விபத்தால் ஏற்பட்ட கடல் மாசு இந்திய கடற்பரப்பிற்கு செல்ல அதிக வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தனர்.
 
இதனால் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் குழு ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், தனுஷ்கோடி பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் பிடித்து வரும் கணவாய், இறால் உள்ளிட்ட மீன்களை ஆய்வு செய்கின்றனர்.
 
மீன்களின் செதில்களில் எண்ணெய் மாதிரிகள் உள்ளனவா, மீன்களின் வாய்களில் பிளாஸ்டிக் துகள்கள் உள்ளனவா என்று அவர்கள் பார்க்கின்றனர். இது தவிர, இறால்கள், நண்டுகளின் உருவ அமைப்பு, நீளம், அகலம் உள்ளிட்டவை முழுமையாக ஆய்வு செய்யப்படுகின்றன.
 
இலங்கை கடலில் எரிந்து மூழ்கும் கப்பல்: மிக ஆபத்தான அமிலங்கள் சிந்தும் அபாயம்
கொழும்பு துறைமுகம் அருகே கப்பலில் பரவிய தீ கட்டுக்குள் வந்தது
இதுவரை நடத்திய ஆய்வில் வேதிக் கழிவுகள் ஏதும் தென்படவில்லை என்றும், மக்கள் அச்சமின்றி மீன்களை சாப்பிடலாம் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
 
கடல் வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பா?
 
மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானி ரம்யா பிபிசி தமிழிடம் பேசுகையில், எரிந்த கப்பலில் இருந்து சிந்திய வேதி பொருட்களால் இந்திய கடற்பரப்பில் பாதிப்பு ஏதும் ஏற்பட்டுள்ளதா என பாம்பன், ராமேஸ்வரம், மண்டபம் பகுதிகளில் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் பிடித்து வரும் மீன்களை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம்.
 
மீன் 

மீனவர்கள் பிடித்து வரும் அனைத்து மீன்களில் இருந்தும் இரண்டு மீன்கள் மாதிரியாக மண்டபம் மரைக்காயர்பட்டினம் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய ஆய்வகத்திற்கு கொண்டுவந்து ஆராயப்படுகிறது.
 
மீன்களின் உடலில் காயங்கள் அல்லது உடல் அமைப்பில் மாற்றம் ஏதும் உள்ளதா என ஆய்வு செய்த பின் மீன்களை அறுத்து அவற்றின் வயிற்றுப் பகுதியில் மீன்கள் சாப்பிட்ட உணவையும், உணவின் அளவு, உணவில் வேதிப்பொருட்கள், பிளாஸ்டிக் துகள்கள் உள்ளனவா என்பதையும், நுண்ணோக்கி பயன்படுத்தி சோதனை செய்யப்பட்டு வருகிறது என்றார் ரம்யா.
 
ராமநாதபுரம் முதல் நாகபட்டினம் வரை கடலில் ஆய்வு
இது குறித்து மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய மூத்த விஞ்ஞானி ஜெயக்குமார் பிபிசி தமிழிடம் பேசுகையில், ராமநாதபுரம் முதல் நாகப்பட்டினம் வரையிலான கடற்கரை பகுதியில் எங்கள் நிறுவன விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு செய்கிறார்கள்.
 
மீன் கடல் நீர் மாதிரிகளை சேகரித்து அதில் எண்ணெய் கசிவு உள்ளதா என ஆய்வு மேற்கொள்கிறோம்.
 
இரண்டாவதாக மீன்களை ஆய்வு செய்கிறோம். இதுவரை கடல் நீரிலும் மீனவர்கள் பிடித்து வரும் மீன்களிலும் எந்த பாதிப்பும் உறுதி செய்யப்படவில்லை. எனவே மக்கள் மீன்களை சாப்பிட அஞ்சவேண்டியதில்லை.
 
யுரேனியத்துடன் இலங்கை எல்லையில் அத்துமீறி நுழைந்த சீன கப்பல்
அமெரிக்காவை மீறி இரான் எண்ணெய் கப்பலை விடுவித்த ஜிப்ரால்டர்
கடல் நீரோட்டம் பாக் ஜல சந்தி, மன்னார் வளைகுடா கடல் பரப்பை நோக்கி இருந்திருந்தால் மட்டுமே தமிழ்நாட்டு கடலோரப் பகுதிகளுக்கு ரசாயன கழிவுகள் வந்திருக்க வாய்ப்பு உண்டு. ஆனால், தற்போது கேரளாவில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக அதிக மழை பெய்து வருவதால் கடல் நீரோட்டம் இலங்கையை நோக்கியே உள்ளது. இதுவே இந்திய கடல் பகுதிக்கு வேதிக் கழிவுகள் வராததற்கு முக்கிய காரணம் என்கிறார் மூத்த விஞ்ஞானி ஜெயக்குமார்.
 
 
மீன்களின் அளவு, உடலமைப்பு ஆய்வு.
 
ரசாயன கழிவுகள் கடலில் கலந்ததால் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனை குறித்து மீனவர் சின்னதம்பி பிபிசி தமிழிடம் பேசுகையில், இலங்கை வேதிக் கப்பல் விபத்தை அடுத்து, ராமநாதபுரம் மாவட்டம் வரும் தனியார் மீன் கொள்முதல் நிறுவனங்கள் இதனை ஒரு காரணமாக கூறி மீன், இறால் விலைகளை குறைத்து வாங்குகின்றனர்.
 
அதேபோல் மக்களும் மீன் சாப்பிட அஞ்சுகின்றனர். ஆனால் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் இதுவரை தமிழ்நாட்டுக் கடற்பகுதியில் ரசாயன கழிவுகளால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது.
 
எனவே மத்திய, மாநில அரசுகள் மத்திய கடல்சார் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையை பொது வெளியில் வெளியிட்டால் மட்டும்மே மீன்களுக்கு உரிய விலை கிடைக்கும், ஏற்றுமதி அதிகரிக்கும் என்கிறார் மீனவர் சின்னதம்பி.
 
கழுகுப் பார்வைகண்காணிப்பு
 
உச்சிப்புளி ஐஎன்எஸ் பருந்து கடற்படை விமான தளத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய நிலைய கமாண்டர் வெங்கடேஷ் கே அய்யர், சரக்கு கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தால் கடலில் கலந்த ரசாயன கழிவுகள் இந்திய கடற்பரப்பிற்குள் பரவியுள்ளனவா என இந்திய கடலோர காவல்படை மற்றும் இந்திய கடற்படையிடம் கடல் ஆராய்ச்சி நிறுவனங்களால் தகவல் கேட்கப்பட்டது.
 
கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள இந்திய கடற்படை ஹெலிகாப்டர்களின் கழுகு பார்வையிலும், இந்திய இலங்கை சர்வதே கடல் எல்லை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வரும் கடலோர காவல் படை கப்பல்கள் நடத்திய ஆய்விலும் இதுவரை வேதிப் பொருட்கள், பிளாஸ்டிக் கழிவுகள் எதுவும் இந்திய கடற்பரப்பில் தென்பட்டதாக தகவல் இல்லை என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரசுப்பேருந்து நிறுத்தி டிரைவரை வெட்ட புகுந்தவரால் பரபரப்பு.