தமிழக அரசின் காலை உணவு திட்டம் மாணவச் செல்வங்கள் படிப்பைப் பாதியில் கைவிடுவதை இந்தத் திட்டம் தடுத்து நிறுத்தியது மட்டுமன்றி, பள்ளிக்கூடங்களிலும் சமுதாயத்தில் பல நற்பயன்களுக்கு வித்திட்டு வருகிறது என்று தமிழ் நாடு முதல்வர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
''அடித்தட்டு மக்களின் ஏற்றம், எல்லோருக்கும் எல்லாம் என்பதை குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வரும் நமது திராவிடமாடல் அரசு, கல்வியும் சுகாதாரமும் இரு கண்கள் எனப் போற்றி முன்னுரிமை அளித்து திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. ஒரு குழந்தைகூட பள்ளிக்குச் செல்வதை நிறுத்திவிடக்கூடாது, போதிக்கும் வேளையில் ஊன்றிப் பாடங்களைக் கவனிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, நாட்டுக்கே முன்னோடியாக, கடும் நிதிநெருக்கடிக்கு இடையிலும் செயல்படுத்தி வரும் தமிழக அரசின் காலை உணவு திட்டம் நாட்டு மக்களின் பாராட்டைப் பெற்றிருக்கிறது. வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் அன்றாடப் பணிச்சுமையைக் குறைத்து இருக்கிறது.
இன்று தினத்தந்தி குழுமத்தின் சார்பில் வெளியாகும் Dt Next நாளேட்டில் வந்த செய்தி என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி இருக்கிறது!
மாணவச் செல்வங்கள் படிப்பைப் பாதியில் கைவிடுவதை இந்தத் திட்டம் தடுத்து நிறுத்தியது மட்டுமன்றி, பள்ளிக்கூடங்களிலும் சமுதாயத்தில் பல நற்பயன்களுக்கு வித்திட்டு வருகிறது.
தொடக்கப்பள்ளி மாணவர்களுக்குச் சிற்றுண்டி உண்ட பின், மீதமிருக்கும் உணவு வீணாவதில்லை; மாறாக, ஆறாம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியரில் யார் காலை உணவு சாப்பிடாமல் வந்துள்ளனர் என்பதைக் கண்டறிந்து, அவர்களுக்கு அந்த உணவை வழங்குகின்றனர் என்ற செய்தி அறிந்து இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தேன். காலையில் வேலைக்குச் செல்லும் தனது தாயால் சமைக்க முடியவில்லை என்பதால் பசியோடு பள்ளிக்கு வந்த ஒன்பதாம் வகுப்பு மாணவன் ஒருவன், பள்ளியில் பகிர்ந்தளிக்கப்படும் சிற்றுண்டியை உண்பதாகக் கூறியதைப் படிக்கும்போது நெகிழ்ந்தேன். அவரைப் போல, பசியோடு வரும் பல மாணவர்களும் உணவருந்திய பின் வகுப்புக்குச் செல்கிறார்கள் என்பதைக் கண்டு, ஒரு நல்ல நோக்கத்தோடு செயல்படுத்தப்படும் திட்டம், மேலும் பற்பல சமூக நன்மைகளுக்கு வித்திடுகிறது நிறைவைத் தருகிறது. உணவை வீணாக்காமல், பகிர்ந்தளிக்கும் ஆசிரியர்கள் பாராட்டுக்குரியவர்கள்.
எத்தனைக் கடினமான சூழ்நிலை இருந்தாலும் நம் வருங்காலத் தலைமுறைக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்துத் தர வேண்டும் என்ற எனது கனவு, கண் முன்னே பலன் தரும்போது ஏற்படும் மகிழ்ச்சியைச் சொல்லவா வேண்டும்!''என்று தெரிவித்துள்ளார்.