சென்னை சூளைமேடு, மேற்கு அஷ்டலட்சுமி நகர் பிரதான சாலையில் உள்ள மழைநீர் கால்வாய் தொட்டியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் கிடந்தது, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மழைநீர் வடிகால்வாய்த் தூர்வாரும் பணியில் ஈடுபட்டிருந்த சென்னை மாநகராட்சி ஊழியர்கள், கால்வாயின் சிமெண்ட் மூடியை திறந்தபோது, உள்ளே ஒரு ஆண் சடலம் மிதந்து கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இதுகுறித்து சூளைமேடு போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், சடலத்தை வெளியே எடுத்து ஆய்வு செய்தனர். அப்போது, அந்த நபரின் வாய் துணியால் கட்டப்பட்டிருந்ததை கண்டறிந்தனர். இதை தொடர்ந்து, காவல்துறையினர் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி, விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழந்தவர் சுமார் 30 முதல் 35 வயது மதிக்கத்தக்கவர் என்றும், அவர் யார் என்பது குறித்தும், அவர் ஏன் கொலை செய்யப்பட்டார் என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சம்பவம், தனிப்பட்ட விரோதம் காரணமாக நடந்த கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உண்டா என்பது குறித்து போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.