தமிழக மட்டுமின்றி வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கும் வகையில் வேளாங்கண்ணியிலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் உள்ள அலையாத்தி காடுகள் வரை படகு போக்குவரத்து சேவை மற்றும் தீம் பார்க் அமைப்பது தொடர்பான ஆய்வு சுற்றுலாத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டது.
இந்தியாவின் மிகவும் பிரபலமான கிறிஸ்தவ யாத்ரீகர் ஸ்தலங்களில் ஒன்றாகவும் கீழ் திசை நாடுகளின் லூர்து நகரம் எனவும் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் அழைக்கப்படுகிறது.நாகப்பட்டினத்திலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள வேளாங்கண்ணி, பிரசித்தி பெற்ற பேராலயமாக மட்டுமின்றி ஒரு காலத்தில் முக்கியமான துறைமுக நகரமாக இருந்துள்ளது.இந்நிலையில் வேளாங்கண்ணி தற்போது உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களின் புனித வழிபாட்டுத் தலமாக விளங்கி வருகிறது.
ரோம் மற்றும் கிரீஸ் வரையிலான பேரரசுகளுடன் நேரடி வர்த்தக உறவுகளைக் கொண்டிருந்த இந்த ஸ்தலம் பல்வேறு வணிக நடவடிக்கைகளின் மையமாகவும் இருந்துள்ளது.
இந்திய அரசின் பாரம்பரிய நகர மேம்பாடு மற்றும் பெருக்குதல் யோஜனா திட்டத்திற்காக பாரம்பரிய நகரங்களில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்ட வேளாங்கண்ணி, வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் இடமாக அதன் திறனை மேலும் மேம்படுத்த தயாராக உள்ளது.
அதுமட்டுமின்றி வேளாங்கண்ணி சுற்றுலா தலத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு முன்னெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, வேளாங்கண்ணி ஆற்று முகத்துவாரத்தில் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்தில், புதிதாக படகு போக்குவரத்து சேவை மற்றும் தீம் பார்க் அமைக்கப்பட உள்ளது.
இதற்காக 4.70.0 ஹெக்டேர் பரப்பளவிலான இடம் தேர்வு செய்யப்பட்டு, வெள்ளை ஆற்றுக் கரையோரம் உள்ள அலையாத்திக் காடுகளோடு வேளாங்கண்ணி கடற்கரையை இணைப்பதற்கான முயற்சி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பதோடு, பொருளாதார ரீதியான முன்னேற்றத்திற்கும் இது வழிவகை செய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தத் திட்டத்திற்காக தமிழக அரசு சார்பில் தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ள நிலையில், அதற்கான ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது தமிழ்நாடு அரசின் சுற்றுலா துறையின் மண்டல மேலாளர் (சென்னை) ஆர். வெங்கடேசன் தலைமையிலான மண்டல சுற்றுலா அலுவலர் (பூம்புகார்) கஜேந்திரகுமார், மேனேஜர் மகேஷ்குமார் உள்ளிட்டோர் வேளாங்கண்ணியில் ஆய்வு மேற்கொண்டனர்.
வேளாங்கண்ணி கடற்கரை பகுதியில் இருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரமுள்ள அலையாத்தி காடுகள் வரை படகுமூலம் சென்று ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது பேரூராட்சி தலைவர் டயானா சர்மிளா, துணைத் தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன், பேரூராட்சி செயல் அலுவலர் பொன்னுசாமி,பேரூர் கழகப் பொறுப்பாளர் மரிய சார்லஸ், பேரூராட்சி கவுன்சிலர் வெற்றிவேல் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.