இன்று சென்னை வரும் பிரதமருக்க்கு கருப்புக்கொடி காட்ட திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் முடிவு செய்து தயார் நிலையில் இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராணுவ கண்காட்சியை பார்வையிட இன்று தமிழகம் வரும் பிரதமருக்கு கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடைபெறும் என்று ஏற்கனவே திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில் தமிழகமெங்கும் பல இடங்களில் வீடுகளில் கருப்புக்கொடி கட்டப்பட்டுள்ளது.
சற்றுமுன்னர் பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வீட்டில் கருப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. அதேபோல் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்பி சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தினார்.
இந்த நிலையில் பிரதமர் வருகையையொட்டி சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கமிஷனர் ஆய்வு சற்றுமுன்னர் ஆய்வு செய்தார். இன்னும் சற்று நேரத்தில் சென்னை விமான நிலையத்தில் பிரதமர் வந்திறங்கவுள்ளதை அடுத்து விமான நிலையம் செல்லும் சாலைகளில் சென்று மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் ஆய்வு செய்தார்.