அதிமுக அமமுக இணைப்பிற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு எழ ஆரம்பித்துள்ளது.
முன்னாள் முதலவர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுக இரண்டாகப் பிளவுற்றது. தற்போது எடப்பாடிப் பழனிசாமி தலைமையில் அதிமுக அணியும் டிடிவி தினகரன் தலைமையில் அமமுக அணியும் செயல்பட்டு வருகின்றனர். இரண்டு அணிகளை சேர்ந்தவர்களும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டும் வார்த்தைப் போரில் ஈடுபட்டும் வருகின்றனர்.
ஆனால் மக்கள் மனதில் அதிமுக வுக்கோ அல்லது அமமுக வுக்கோ குறிப்பிட்டு சொல்லும் படியான இடம் இல்லை என்பது வெட்டவெளிச்சமாகாத் தெரிகிறது. கஜாப் புயலால் பாதிக்கப்பட்ட மக்களைக் காணச்சென்ற அமைச்சர்களை மக்கள் எதிர்கொண்ட விதமே அதற்கு ஒரு பானை சோறு. அதனால் பிளவு பட்டிருந்தால் தங்களுக்குதான் இன்னும் மேலதிகமான சேதாரம் என்பதை உணர்ந்து கொண்ட இரு அணிகளும் ஒன்றுசேர விரும்புவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் கட்சி இரண்டாக பிளவுப்பட்டு இருப்பது நம் அனைவருக்கும் பின்னடைவுதான் என்றும் மேலும் அதனால் திமுக வின் செல்வாக்கு உயர்ந்ததுதான் மிச்சம் என்று இப்போது உணர ஆரம்பித்துள்ளனர். இதனை வெளிப்படுத்தும் விதமாக சிறு சிறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமமுக செய்தி தொடர்பாளர் தங்கத் தமிழ்ச்செல்வன் ‘அதிமுக அமமுக அணிகள் இணைவதற்கான நல்ல சூழல் தற்போது நிலவி வருகிறது. அணிகள் இணைந்தால் நல்லதுதான்’ எனத் திரியைக் கொளுத்திப் போட்டார்.
இதற்கிடையில் அமமுக வில் இருந்து செந்தில் பாலாஜி உள்ளிட்ட சிலர் திமுகவில் இணைய இருப்பது அதிமுக மற்றும் அமமுக மத்தியில் பேரிடியாய் விழுந்திருக்கிறது. இதனால் அச்சமடைந்துள்ள இரு தரப்பினரும் விரைவில் ஒரு முடிவை அறிவிப்பார்கள் எனத் தெரிகிறது.
ஆனால் அணிகள் இணைப்பிற்குப் பின் பாஜக இருந்து செயல்படுவதாகவும் ஒரு செய்தி உலா வர ஆரம்பித்துள்ளது. பாஜக மேல்மட்டத்தில் உள்ளவர்கள் சிலர் டிடிவி தினகரனை சந்தித்து இது குறித்து அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. அவர் இதுகுறித்து சிறையில் இருக்கும் சசிகலாவிடம் விரைவில் ஆலோசிக்க உள்ளதாகவும் தெரிகிறது. அணிகளை இணைத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக ,அதிமுகவுடன் கூட்டணி வைத்துப் போட்டியிடலாம் என்ற முடிவில் உள்ளதாக தெரிகிறது. இதனால் விரைவில் அணிகள் இணைப்புக் குறித்த செய்தி வெளிவரும் எனத் தெரிகிறது.