சென்னை பள்ளிக்கரணை சாலையில் வைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சி பேனர் சாய்ந்து விழுந்ததில் தவறி விழுந்த இளம்பெண் லாரி மோதி உயிரிழந்தார். இதுகுறித்து பாஜக வெளியிட்டுள்ள ட்விட்டர் அறிக்கையை திட்டி பதிவிட்டுள்ளனர் சிலர்.
சென்னை பள்ளிக்கரணை சாலை ஓரத்தில் முன்னாள் அதிமுக கவுன்சிலர் ஒருவர் கட்சி பேனர்களை அமைத்திருந்தார். அந்த வழியாக சுபஸ்ரீ என்ற இளம்பெண் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தபோது பேனர் அவர் மீது விழுந்தது. இதில் தவறி விழுந்த சுபஸ்ரீ மீது லாரி மோதியது. உடனடியாக அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது குறித்து ட்விட்டரில் செய்தி வெளியிட்ட தமிழக பாஜக “பேனர் விழுந்து இளம்பெண் உயிரிழந்தது பெரும் வேதனை தரக்கூடிய செயல் பொதுமக்களுக்கு இடையூறாக பேனர் வைப்பது அப்பட்டமான விதிமுறை மீறல். குற்றம் புரிந்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். திராவிட கட்சிகளின் பேனர் கலாச்சாரம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்.” என்று பதிவிட்டுள்ளனர்.
இதற்கு பதிலளித்துள்ள சிலர் “பேனர் வைத்ததே உங்கள் கூட்டணி கட்சிதான் என்று உங்களுக்கு தெரியாதா?” என கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் திராவிட கட்சிகளின் பேனர் கலாச்சாரம் என கூறப்பட்டுள்ளதை குறிப்பிட்டு காட்டி “நீங்களெல்லாம் பேனர்கள் வைப்பதே இல்லையா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்கள்.