பிரதமரின் வீடு கட்டும் திட்ட பயனாளியிடம் பணம் கேட்டு மிரட்டிய திமுக பெண் கவுன்சிலரின் கணவரை கண்டித்து பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பிரதமரின் திட்ட பயனாளிகளை மிரட்டினால் திமுக கவுன்சிலர்களின் வீடுகள் முன் போராட்டம் நடத்துவோம் என பாஜக எச்சரிக்கை. மதுரை மாநகராட்சி 41ஆவது வார்டுக்கு உட்பட்ட அனுப்பானடி பகலவன் நகர் பூக்கார தெரு பகுதியில் உள்ள வயதான தம்பதியினர் ஒருவர் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பயனாளியாக தேர்ந்தெடுக்கப்பட்டு வீடு கட்டியுள்ளனர்.
இந்நிலையில் வீட்டின் கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில் வீட்டிற்கு தேவையான பாதாளசாக்கடை, குடிநீர் குழாய் இணைப்பு பெறுவதற்கான பணிகளை தொடங்கியுள்ளனர். அப்போது அந்த வீட்டிற்கு சென்ற 42ஆவது வார்டு திமுக மாமன்ற உறுப்பினரின் செல்வியின் கணவர் கார்மேகம் பணம் கேட்டதோடு, நான்தான் கவுன்சிலர் என கூறியதோடு பிரதமர் ஸ்கீம்ல வீடு கட்டும் போது என்ட கேட்காம எப்படி கட்டுன என மிரட்டியதோடு, வாயை உடைப்பேன், அடிப்பேன் எனவும் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் 41வது வார்டு பெண்கவுன்சிலரான செல்வியின் கணவரான கார்மேகத்தை கண்டித்து மதுரை முனிச்சாலை பகுதியில் பாஜகவினர் 100க்கும் மேற்பட்டோர் மாவட்ட தலைவர் சுசீந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது திமுகவிற்கு எதிராகவும், திமுக கவுன்சிலர்களை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.
தொடர்ந்து மாவட்ட தலைவர் சுசீந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், பிரதமரின் வீடு கட்டும் திட்ட பயனாளிகளை மிரட்டியவர்கள் மீது பாஜக சார்பில் புகார் கொடுத்தும் காவல்துறை வழக்குப்பதிவு செய்யவில்லை, இதே நிலை தொடர்ந்தால் திமுக கவுன்சிலர்களின் வீடுகள் முன்பு பாஜகவினர் போராட்டம் நடத்துவோம், திமுக கவுன்சிலர்களை சிறைக்கு அனுப்புவோம், தொடர்ந்து மிகப்பெரிய போராட்டங்களை நடத்துவோம் என பேசினார்.