ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள அதிமுக அலுவலக பேனரில் பாஜகவினர் போட்டோ இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதிமுக வேட்பாளர் அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் தற்போது அதிமுக எடப்பாடி பழனிசாமி அணி வேட்பாளராக தென்னரசு என்பவரை அறிவித்துள்ளது. அதை தொடர்ந்து அதிமுக தேர்தல் அலுவலகம் அமைக்கப்பட்டு இன்று திறக்கப்பட்டது.
அங்கு வைக்கப்பட்டுள்ள பேனரில் அதிமுக கூட்டணியில் உள்ள ஜி.கே.வாசன், டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோர் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. முன்னதாக சட்டமன்ற தேர்தலில் கூட்டணி வைத்து பின்னர் கூட்டணியிலிருந்து விலகிய பாமகவினர் படங்கள் இடம்பெறவில்லை. இதுதவிர ஈரோடு பகுதியின் புகழ்பெற்ற தலைவர்கள் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
ஆனால் பாஜக சார்பில் யாருடைய போட்டோவும் அதில் இடம்பெறவில்லை. மேலும் இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளரை ஆதரிப்பது குறித்து பாஜக தரப்பில் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. அதனால் இரு கட்சிகளிடையேயான கூட்டணி முடிவுக்கு வந்துவிட்டதா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.