அதிமுக பொதுக்குழுவிற்கு பெங்களூர் நீதிமன்றம் விதித்த தடை உத்தரவு நகல் அதிமுக தலைமை அலுகத்தில் ஒட்டப்பட்ட விவகாரம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அணி என இரண்டாக பிரிந்திருந்த அதிமுக, தற்போது எடப்பாடி அணி மற்றும் தினகரன் அணி என இரண்டாக பிரிந்துள்ளது.
இரு அணிகளும் ஒன்று சேர்ந்த பின், விரைவில் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று காலை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் நடைபெறவுள்ளது.
முன்னதாக, இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு பெங்களூர் நீதிமன்றம் நேற்று தடை விதித்து தீர்ப்பளித்தது. எனவே, இந்த கூட்டம் நடைபெறுமா என்கிற சந்தேகம் எழுந்தது. ஆனால், சென்னை உயர்நீதிமன்றம், இந்த கூட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என கை விரித்து விட்டது. எனவே, இந்த கூட்டம் நடைபெறுவது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், பெங்களூர் நீதிமன்றம் வழங்கிய இடைக்காலத் தடை உத்தரவு நகலை, டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் அதிமுக அலுவலகத்தில் ஒட்டி சென்றுள்ளனர். இதைக் கண்ட சிலர் அதை கிழித்து எறிந்தனர். இதனால், அங்கு சில நேரம் பரபரப்பு ஏற்பட்டது.