செல்போனில் பேசியபடி கார் ஓட்டியதாக கைது செய்யப்பட்டுள்ள பிரபல யூடியூபர் டிடிஎப் வாசனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி மதுரை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 15ம் தேதி தனது காரில் சென்னையில் இருந்து நெல்லைக்கு மதுரை வழியாக வாசன் பயணித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது ஒரு கையில் செல்போனில் பேசியபடியும், மற்றொரு கையால் காரை இயக்கிக் கொண்டும் சென்றார். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், அஜாக்கிரதையாக வாகனத்தை இயக்கியதாகக் கூறி அவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
தொடர்ந்து மதுரை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் டி.டி.எப் வாசனை போலீசார் ஆஜர்படுத்தினர். விசாரணை மேற்கொண்ட நீதிபதி, TTF வாசன் 10 நாட்கள் அண்ணாநகர் காவல் நிலையத்தில் காலை 10 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிட்டார்.
காவல் துறையினர் எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி நீதிபதி ஆணை பிறப்பித்தார்.