டெல்லியில் நேற்று சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியானது. இந்த கருத்துக்கணிப்பு குறித்து, ஆம் ஆத்மி கட்சி கூறியபோது, மசாஜ் மற்றும் ஸ்பா நிறுவனம் எடுத்த கருத்துக்கணிப்பு போல் உள்ளது என்று தெரிவித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் 70 சட்டமன்ற தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், தேர்தலுக்குப் பின்னர் பல முன்னணி நிறுவனங்கள் கருத்துக்கணிப்புகளை எடுத்தன. இந்த கருத்துக்கணிப்பின் முடிவுகள் நேற்று இரவு வெளியான நிலையில், பெரும்பாலும் பாஜக தான் டெல்லியில் ஆட்சி அமைக்கும் என்றும், அந்த கட்சிக்கு 40 முதல் 45 தொகுதிகள் வரை கிடைக்கும் என்றும் கூறப்பட்டிருந்தது.
ஆம் ஆத்மி கட்சி எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் என்றும், காங்கிரஸ் கட்சிக்கு ஒரு சீட்டு கூட கிடைக்க வாய்ப்பில்லை என்றும் பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன.
இந்த நிலையில், இந்த கருத்துக்கணிப்பு குறித்து ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. சஞ்சய் சிங் கருத்து கூறிய போது, மசாஜ் மற்றும் ஸ்பா நடத்தும் நிறுவனங்கள் தேர்தலுக்கு பின்னர் கருத்துக்கணிப்பு நடத்தினால், அதன் முடிவு என்னவாக இருக்கும் என்பதே நேற்று வெளியான எக்ஸிட் போல் விவரங்கள் என்றும் கூறினார்.
பிப்ரவரி 8ஆம் தேதி வரை காத்திருக்குமாறு உங்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன் என்றும், ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.