Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இளைஞர்களை ஈர்க்கும் ஈஷா மஹா சிவராத்திரி விழா: குடியரசு துணைத் தலைவர் பெருமிதம்

இளைஞர்களை ஈர்க்கும் ஈஷா மஹா சிவராத்திரி விழா: குடியரசு துணைத்  தலைவர் பெருமிதம்

J.Durai

கோயம்புத்தூர் , சனி, 9 மார்ச் 2024 (11:56 IST)
"ஈஷா யோக மையத்தில் நடத்தப்படும் மஹா சிவராத்திரி விழா உலகம் முழுவதும் உள்ள நவீன கால இளைஞர்களை ஈர்க்கும் வகையில் மிகப் பிரம்மாண்டமாக நடத்தப்படுவது பாராட்டுக்குரியது" என குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் அவர்கள் பெருமிதத்துடன் கூறினார். 
 
கோவை ஈஷா யோக மையத்தில் 30ஆவது ஆண்டு மஹா சிவராத்திரி விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற குடியரசு துணைத் தலைவர் திரு.ஜகதீப் தன்கர் அவர்கள் விழாவில் பேசியதாவது: 
 
"சத்குரு முன்னிலையில் நடத்தப்படும் ஈஷா மஹா சிவராத்திரி விழாவில் நான் கலந்து கொள்வதை என் வாழ்வில் எனக்கு கிடைத்த மிகப் பெரிய பெருமையாகவும் பாக்கியமாகவும் உணர்கிறேன்.  
 
நம் பாரத கலாச்சாரத்தில் மஹா சிவராத்திரி விழா மிக முக்கியமான விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இருப்பினும் ஈஷாவில் நடத்தப்படும் மஹாசிவராத்திரி விழாவானது தனித்துவமானது; ஈடு இணையற்றது. உலகம் முழுவதும் உள்ள நவீன காலத்து இளைஞர்களை ஈர்க்கும் விதமாக இந்நிகழ்வு நடத்தப்படுகிறது. 
 
மதம், மொழி, இனம், தேசம், கலாச்சாரம் என அனைத்து எல்லைகளையும் கடந்து அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடும் விழாவாக இது திகழ்கிறது. இது மிகவும் பாராட்டுக்குரியது. அத்துடன், ஈஷாவில் கர்மா, பக்தி, ஞானம், க்ரியா என நான்கு மார்கங்களிலும் யோகா கற்றுக் கொடுக்கப்படுகிறது.
 
சத்குரு அவர்கள் யோகாவை உலகம் முழுவதும், பட்டி தொட்டியெங்கும் கொண்டு சென்று வருகிறார். மனித குல நல்வாழ்விற்காக அவர் மேற்கொள்ளும் அனைத்து செயல்களும் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் கூறினார் 
 
இவ்விழாவில் சத்குரு அவர்கள் தொடக்க உரையாற்றுகையில்,
 
 "இன்று நடைபெறும் மஹாசிவராத்திரி விழா ஈஷாவில் நடத்தப்படும் 30 ஆவது மஹாசிவராத்திரி விழாவாகும். 1994 ஆம் ஆண்டு நாம் நடத்திய மஹா சிவராத்திரி விழா, வெறும் 70 பேருடன் மட்டுமே நடத்தப்பட்டது. அப்போது 75 வயது பாட்டி ஒருவர் இரண்டே பாடலை இரவும் முழுவதும் பாடிக் கொண்டேயிருப்பார். இருப்பினும் அவருடைய பக்தி மெய் சிலிர்க்க வைக்கக்கூடியது.  கடந்த ஆண்டு மஹாசிவராத்திரி விழாவை மட்டும் உலகம் முழுவதுமிருந்து சுமார் 14 கோடி பேர் பார்வையிட்டுள்ளனர்
 
இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 20 கோடியை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மஹாசிவராத்திரி நாளில் கோள்களின் அமைப்பால், ஒருவரின் உயிர் சக்தியானது இயல்பாகவே மேல்நோக்கி செல்லும். எனவே இந்நாள் வெறும் விழிப்புடன் மட்டுமே இருக்கும் நாளாக இல்லாமல், நம் வாழ்வின் பல்வேறு பரிமாணங்களை விழிப்படைய செய்யும் நாளாகவும் அமைய வேண்டும் என்பது என் விருப்பம்." எனக் கூறினார். 
 
இவ்விழாவில் குடியரசு துணைத் தலைவர் மட்டுமின்றி அவரது துணைவியார் டாக்டர். சுதேஷ் தன்கர், தமிழக ஆளுநர் திரு. ஆர்.என். ரவி,  திரிபுரா ஆளுநர் திரு. இந்திரசேனா ரெட்டி, பஞ்சாப் ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோஹித், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். விழாவிற்கு வந்த அவர்களை சத்குரு அவர்கள் வரவேற்றார். 
 
பின்னர் அவர்கள் ஈஷாவில் உள்ள சூரிய குண்டம், நாகா சந்நிதி, லிங்க பைரவி, தியான லிங்கம் உள்ளிட்ட சக்தி ஸ்தலங்களுக்கு சென்று தரிசித்தனர். மேலும் தியானலிங்கத்தில் நடைபெற்ற பஞ்ச பூத க்ரியா நிகழ்விலும் பங்கேற்றனர். 
 
மாலை 6 மணிக்கு தொடங்கிய விழா மறுநாள் காலை 6 மணி வரை உற்சாகமாகவும், வெகு விமர்சையாகவும் நடைபெற்றது.
 
இவ்விழாவில் இந்தியா மட்டுமின்றி, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் கலந்துகொண்டனர். விழா மேடையானது வாரணாசி கோவில் கோபுரங்களின் தோற்றத்துடன் வண்ணமயமாக வடிவமைக்கப்பட்டிருந்து, இது அனைவரையும் கவர்ந்திழுத்தது. 
 
இரவு முழுவதும் களைகட்டிய கலை நிகழ்ச்சிகளில், கிராமி விருது வென்ற திரையிசை பாடகர் சங்கர் மஹாதேவன் அவர்களின் இசை நிகழ்ச்சி அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தியது. 
 
அவரை தொடர்ந்து, தெய்வீகம், விவசாயம் மற்றும் மண் சார்ந்த பாடல்களை  தன் கம்பீர குரலால் பாடி அரங்கை அதிர செய்தார் தமிழ் நாட்டுபுற பாடகர் மகாலிங்கம்.  அதுமட்டுமின்றி மும்பை தாராவியை சேர்ந்த இளைஞர்கள் தமிழிலும், இந்தியிலும் ராப் பாடல்களை பாடி மக்களின் உற்சாகத்தை பன்மடங்கு கூட்டினர்.  மேலும் லெபனீஸ் டிரம்ஸ் இசைக்குழுவினர், கர்நாடக இசையின் புகழ்பெற்ற பாடகர் சந்தீப் நாரயணன், பிரதிவி கர்தவ் மற்றும் சூஃபி பாடகர்கள், குரு தாஸ் மன், ரதஜீத் பட்டாசர்ஜி உள்ளிட்ட உலகின் தலைச்சிறந்த கலைஞர்கள் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர். 
 
இதுமட்டுமின்றி மஹா சிவராத்திரியின் முக்கிய நிகழ்வான நள்ளிரவு மற்றும் பிரம்மமுஹூர்த்த வேளையில் லட்சக்கணக்கான மக்கள் சத்குருவுடன் அஉம் நமச்சிவாய மந்திர உச்சாடனம் மற்றும் சக்தி வாய்ந்த தியான நிகழ்வுகளிலும் மேற் கொண்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கவிப்பேரரசு வைரமுத்துவின் மகாகவிதை நூலுக்காக 1 லட்சம் வெள்ளி