சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர் பாலாஜி மீது விக்னேஷ் என்பவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, மருத்துவர்கள், செவிலியர்கள் திடீரென போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், மருத்துவத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு, மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இருந்தபோதிலும், இந்த மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்துவிட்டனர்.
இந்த நிலையில், மருத்துவத்துறை செயலாளர் சுப்ரியா சாகு, காவல் ஆணையர் அருண் மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் ஆகியோர் மீண்டும் மருத்துவ சங்கங்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தையில், பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, மருத்துவர்கள், செவிலியர்கள் நடத்தி வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே, மருத்துவர்கள் தங்கள் சார்பில் 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திய நிலையில், அவை அனைத்தையும் அரசு ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.