நாகர்கோவில் அருகே ஜோதிடர் சொன்னது பலிக்கவில்லை என்பதால் அவரை பெண் ஒருவர் தனது முகநூல் நண்பருடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாகர்கோவில் அருகே ஜான் ஸ்டீபன் என்ற ஜோதிடர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில், இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை செய்த போது சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த சில நாட்களுக்கு முன்னால் கலையரசி என்ற பெண் தனது கணவரை பிரிந்து வாழ்வதாகவும், அவருடன் சேர்ந்து வாழ என்ன பரிகாரம் என ஜான் ஸ்டீபன் என்ற ஜோதிடரை அணுகி உள்ளார். அவர் கூறிய பரிகாரத்தை செய்தும் கணவர் தன்னுடன் சேர்ந்து வாழ வில்லை என்றும், எனவே தான் கொடுத்த ஒன்பது லட்சம் பணத்தை திருப்பி தர வேண்டும் என்றும் கேட்டு இருக்கிறார்.
ஆனால் ஜோதிடர் அந்த பணத்தை கொடுக்க முடியாது என்று கூற, ஆத்திரம் அடைந்த கலையரசி, முகநூல் நண்பரான நம்பிராஜன் என்பவருடன் சேர்ந்து ஜான் ஸ்டீபனை கொலை செய்திருக்கிறார் என்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து கலையரசி, நம்பிராஜன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.