கொல்கத்தாவில் மருத்துவ கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த சஞ்சய் ராவ் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இருப்பினும், நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னரும் மருத்துவர்கள் போராட்டம் செய்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதனை அடுத்து, சஞ்சய் ராவ் என்பவரை காவல்துறையினர் கைது செய்து, இந்த வழக்கை விசாரணை செய்தனர்.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், பெண் மருத்துவர் கொலை வழக்கில் சஞ்சய் மட்டுமே ஒரே குற்றவாளி என குற்றம் சாட்டப்பட்டது. அவருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என சிபிஐ தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இதனை அடுத்து வெளியான தீர்ப்பில், சஞ்சய்க்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டது. அதன்படி, அவர் குற்றவாளி என நீதிபதி தீர்ப்பளித்தார்.
ஆனால், இந்த தீர்ப்பை பெண் மருத்துவரின் தாய் ஏற்றுக்கொள்ளவில்லை. தனது மகள் கொலையில் மேலும் பலருக்கு தொடர்பு உள்ளதாகவும், அவர்களை கைது செய்யும் வரை இந்த வழக்கு நிறைவடையாது என்றும், முழுமையாக இந்த வழக்கு நிறைவடையும் நாளுக்காக காத்திருப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.
தீர்ப்புக்கு பிறகு, மருத்துவர்கள் கூறியதாவது: “சஞ்சய் மட்டுமே எப்படி இந்த குற்றத்தில் ஈடுபட்டிருக்க முடியும்? எஞ்சிய குற்றவாளிகள் கைது செய்யப்படும் வரை போராட்டம் தொடரும்.”