சென்னையைச் சேர்ந்த நபர் தடை செய்யப்பட்ட பாகிஸ்தான் இயக்கத்திற்கு ஆள் சேர்த்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியா உள்பட பல நாடுகளில் தடை செய்யப்பட்ட பாகிஸ்தானின் அமைப்புக்கு ஆள் சேர்த்து சதியில் ஈடுபடுபவர்களை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்து வரும் நிலையில், சென்னை ராயப்பேட்டையில் கல்வி நிலையம் என ரகசிய கூட்டம் நடத்தி பயங்கரவாத பயிற்சி அளித்த டாக்டர் ஹமீது உசேன் உள்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஹமீது உசேன் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் கவுரவ பேராசிரியர் என்றும் கூறப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்ட இன்னொரு நபர் சென்னையை சேர்ந்த பைசல் ரகுமான் என்றும், அவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட நிலையில், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் தற்போது ஆறு பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது.
பாகிஸ்தானின் தடை செய்யப்பட்ட இயக்கத்திற்காக இந்தியாவில் ஆள் சேர்க்கும் பணியில் இந்த ஏழு பேர் ஈடுபட்டு வருவதாகவும், இளைஞர்களுக்கு பயங்கரவாத பயிற்சியும் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.