Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

போராடும் விவசாயிகள், பொதுமக்களை கைது செய்வதா? வானதி சீனிவாசன்

போராடும் விவசாயிகள், பொதுமக்களை கைது செய்வதா? வானதி சீனிவாசன்
, வெள்ளி, 24 நவம்பர் 2023 (17:54 IST)
தங்களின் பொன் விளையும் பூமியான விளை நிலங்களைப் பாதுகாக்க நினைக்கும் பரந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்களின் உணர்வுகளை திமுக அரசு புரிந்து கொள்ள வேண்டும் என்று  வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
 
காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் புதிய பன்னாட்டு விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த நிர்வாக அனுமதி அளித்து, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது, புதிய விமான நிலையம் அமைப்பதை எதிர்த்து கடந்த பல மாதங்களாகப் போராடி வரும் 20-க்கும் மேற்பட்ட கிராம மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் முறையிட மக்கள் மீது காவல்துறையினர் அடக்குமுறையை ஏவிவிட்டு கைது செய்துள்ளனர். திமுக அரசின் இந்த ஜனநாயக விரோத, பாசிச நடவடிக்கைக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
கடந்த வாரம் திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியில் சிப்காட் தொழில் பூங்காவுக்கு விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுவதை எதிர்த்து அறவழியில் போராடிய விவசாயிகளை திமுக அரசு கைது செய்தது. அவர்களில் 7 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். மண்ணுரிமைக்காகப் போராடிய விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்த ஒரே அரசு திமுக அரசுதான்.
 
எதிர்க்கட்சியாக இருந்த போது அனைத்து திட்டங்களையும் கடுமையாக எதிர்த்து, அதற்கு எதிராக போராட்டங்களை நடத்திய திமுக, இன்று ஆட்சி அதிகாரம் கைக்கு வந்ததும் போராடும் மக்கள் மீது காவல்துறையை ஏவிவிட்டு, தடியடி, குண்டர் சட்டத்தில் கைது என அடக்குமுறையை கையாண்டு வருகிறது.
 
தங்களின் பொன் விளையும் பூமியான விளை நிலங்களைப் பாதுகாக்க நினைக்கும் பரந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்களின் உணர்வுகளை திமுக அரசு புரிந்து கொள்ள வேண்டும். பரந்தூர் விமான நிலையத்தால், நீர்நிலைகள், நீர்வழித்தடங்களுக்கு ஏற்படப்போகும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் அறிக்கை வெளிவராத நிலையில், நிலம் கையகப்படுத்த நிர்வாக அனுமதி அளித்து, அரசாணை வெளியிடப்பட்டிருப்பதுதான் விவசாயிகளை, பொதுமக்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. இதற்காக முறையிட வந்த விவசாயிகளிடம் பேச்சு நடத்தி தீர்வு காணாமல் அடக்குமுறையை ஏவி கைது செய்திருப்பது எந்த வகையிலும் நியாயமல்ல. கைது செய்யப்பட்ட விவசாயிகள், பொதுமக்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். விவசாயிகளின் ஒப்புதலுடன்தான் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்''என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தாயை அடித்துக் கொன்று வீட்டிலேயே புதைத்த மகன் கைது!