ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 5 பேரை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் எழும்பூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5-ம் தேதி மாலை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டுக்கு அருகே கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக ஏற்கனவே கொல்லப்பட்ட பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, அவரது கூட்டாளி திருவேங்கடம் உட்பட 8 பேர் அன்று இரவே கைது செய்யப்பட்டனர்.
அதைத்தொடர்ந்து, அடுத்தடுத்து 13 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த கொலை வழக்கில் திமுக, அதிமுக, பாஜக உட்பட பல்வேறு கட்சி பிரமுகர்கள் உட்பட தற்போது வரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடம் போலீசாரின் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார்.
இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக பொன்னை பாலு, அருள், ராமு, ஹரிதரன், சிவசக்தி ஆகியோரை எழும்பூர் நீதிமன்றத்தில் போலீசார் இன்று ஆஜர்படுத்தினர். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என போலீசார் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில் 5 பேரையும் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு எழும்பூர் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஜெகதீசன் அனுமதி வழங்கினார். இதையடுத்து, பூந்தமல்லி கிளை சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 5 பேரையும் போலீஸார் அழைத்து சென்றனர்.