ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான மலர் கொடியை அதிமுகவில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரும், வழக்கறிஞருமான ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் முன்பு மர்ம கும்பலால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக மறைந்த கூலிப்படை தலைவன் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு மற்றும் அவரது கூட்டாளிகளான சந்தோஷ், திருமலை, மணிவண்ணன், குன்றத்தூர் திருவேங்கடம், திருநின்றவூர் ராமு என்ற வினோத் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் திருவேங்கடம் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிமுக திருவல்லிக்கேணி மேற்கு கழக பகுதி துணை செயலாளரும், வழக்கறிஞருமான மலர்கொடி உள்ளிட்ட மேலும் மூன்று பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் அதிமுகவிலிருந்து மலர்கொடி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். கட்சிக்கு களங்கம், அவப்பெயரை உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தால் மலர்க்கொடி கட்சியிலிருந்து நீக்கம் செய்வதாக அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.