கோடை சீசன் வந்தாலே சாலையோரங்களில் விற்கப்படும் தர்பூசணி பழங்களை வாங்கி சாப்பிட்டு மக்கள் தாகம் தணித்துக் கொள்வது அதிகமாக காணப்படும். தற்போது கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில் அதை திட்டமிட்டு முன்னரே தமிழ்நாடு விவசாயிகள் பலர் தர்பூசணிகளை சாகுபடி செய்திருந்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரி ஒருவர் வெளியிட்ட வீடியோ ஒன்றில் தர்பூசணிகளில் செயற்கை நிறமூட்டிகள் ஊசி மூலம் செலுத்தப்படுவதாகவும், டிஸ்யூ பேப்பரில் தர்பூசணி பழத்தை தொட்டு எடுத்தால் அந்த சிவப்பு சாயம் அதில் ஒட்டிக் கொள்ளும் என்றும் கூறியிருந்தார்.
இதை தர்பூசணி விவசாயிகள் கடுமையாக மறுத்துள்ளனர். சமீபத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்திய விவசாயிகள் இயற்கையாக விளைந்த தர்பூசணி பழங்களில் டிஸ்யூ பேப்பரை வைத்து எடுத்தாலும் சிவப்பு ஒட்டும் என்றும், மாதுளை, திராட்சை போன்ற பழங்களிலுமே அதன் நிறம் ஒட்டும் என சுட்டிக்காட்டி அவை அந்த பழங்களில் உள்ள இயற்கை நிறமூட்டிகளே என வாதிட்டனர். மேலும் உணவு பாதுகாப்புத்துறையினரின் ஆதாரமற்ற குற்றச்சாட்டால் தர்பூசணி விவசாயிகள் அவற்றை விற்க முடியாமல் நஷ்டமடையும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியிருந்தனர்.
இந்நிலையில் இந்த சர்ச்சை விவகாரத்தில் தெளிவு அளிப்பதற்காக தமிழ்நாடு தோட்டக்கலை துறை அலுவலர்கள் தர்பூசணி சாகுபடி பகுதிகளில் நேரடியாக சென்று ஆய்வு செய்து வருகின்றனர். உடுமலை அடுத்துள்ள மடத்துக்குளம் வட்டாரத்தில் 200 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த தர்பூசணி ரகங்கள், கள்ளக்குறிச்சியில் 650 ஹெக்டேர் வயலில் பயிரிடப்பட்டிருந்த ஐஸ்பாக்ஸ் ரக தர்பூசணி, வரிக்காய் ரகம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ததில் அவற்றில் எந்த விதமான நிறமிகள் கலப்போ, ரசாயன கலப்போ இல்லை என்று உறுதியளித்துள்ளனர்.
மேலும் கோடைக்காலங்களில் தர்பூசணி சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்றும், மக்கள் எந்த வித அச்சமும் இன்றி தர்பூசணிகளை வாங்கி உண்ண வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Edit by Prasanth.K