Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முல்லை பெரியாற்று அணையை கண்காணிக்க கேரள பொறியாளர்களா? அன்புமணி ஆவேசம்

Advertiesment
Anbumani

Mahendran

, சனி, 14 டிசம்பர் 2024 (16:07 IST)
முல்லைப்பெரியாற்று அணையின் பராமரிப்பு பணிகளை கண்காணிக்க கேரள பொறியாளர்களை அனுமதிப்பதா? தமிழக உரிமைகளை திமுக அரசு தாரைவார்த்து விட்டத என அன்புமணி ஆவேசமாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
முல்லைபெரியாற்று அணையின்  பராமரிப்புப் பணிகளை தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை பொறியாளர்கள் மேற்கொள்ளும் போது, அந்தப் பணிகளை  கேரள அரசின்   நீர்ப்பாசனத் துறை பொறியாளர்கள் மேற்பார்வையிடுவார்கள் என்பன உள்ளிட்ட  நிபந்தனைகளை தமிழக அரசு ஏற்றுக் கொண்டிருப்பதாகவும், அதனடிப்படையில்  மட்டும் தான் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. இந்த விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு கண்டிக்கத்தக்கது.
 
முல்லைப்பெரியாற்று அணை கேரள நிலப்பகுதியில் இருந்தாலும் அதைப் பராமரிக்கும் உரிமை முழுக்க முழுக்க தமிழக அரசின் நீர்வளத்துறைக்கு தான் வழங்கப்பட்டிருக்கிறது. இதை உச்சநீதிமன்றமும் உறுதி செய்திருப்பது மட்டுமின்றி,  முல்லைப் பெரியாறு அணை மற்றும் பேபி அணைகளை  வலுப்படுத்த வேண்டும்; அவ்வாறு வலுப்படுத்தியவுடன் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை இப்போதுள்ள 142 அடியிலிருந்து  152 அடியாக உயர்த்திக் கொள்ளலாம்  என்று கடந்த 2014-ஆம் ஆண்டு மே மாதம் தீர்ப்பளித்திருக்கிறது. இத்தகைய சூழலில் முல்லைப் பெரியாறு அணையின் பராமரிப்புப் பணிகளை மேற்பார்வையிட  கேரளத்தை அனுமதிப்பது  தமிழ்நாட்டின் உரிமைகளை தாரை வார்க்கும் செயலாகும். இதன் மூலம் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் நலன்களுக்கு  திராவிட மாடல் அரசு பெரும் துரோகத்தை செய்திருக்கிறது.
 
முல்லைப்பெரியாற்று அணையில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டியது முன்னுரிமை என்பதால் தான்  கேரளத்தின் நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டதாகவும்,   அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து  சட்ட வல்லுனர்களுடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும் என்றும் நீர்வளத்துறை  செயலாளர் மணிவாசன் கூறியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
 
முல்லைப்பெரியாற்று அணை மற்றும் பேபி அணையில் மேற்கொள்ளப்பட வேண்டிய 13 வகையான பராமரிப்புப் பணிகள் குறித்து கடந்த மே மாதம் 7-ஆம் தேதியே கேரள அரசுக்கு தமிழக பொறியாளர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர். அதைத் தொடர்ந்து நேரிலும் சென்று வலியுறுத்தியுள்ளனர். கேரள பொறியாளர்களும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பாகவே அங்கு சென்று ஆய்வு செய்துள்ளனர். ஆனால், அதன்பின் பல மாதங்களாக கேரளம் அனுமதி அளிக்காத நிலையில், தமிழக அரசு உச்சநீதிமன்றத்திற்கு சென்று அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஆனால், அதை செய்யத் தவறிவிட்டு, இப்போது கேரளம் விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கு எல்லாம் ஒப்புக் கொள்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. இது தமிழக நலன்களுக்கு உதவாது.
 
பராமரிப்பு பணிகளை நாங்கள் மேற்பார்வையிடுவோம் என கேரளம் கட்டுப்பாடு விதிப்பது உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது. ஆனால், அது தெரிந்திருந்தும் கேரளத்தின் நிபந்தனைகளை தமிழக அரசு ஏற்றுக் கொண்டு விட்ட நிலையில், அம்மாநில அரசு விரைவில் உச்சநீதிமன்றத்தை அணுகி , இனி வரும் காலங்களில் தாங்களே  மேற்கொள்வதற்கு அனுமதி கோரும் வாய்ப்புகளும், அந்த முயற்சிகளில் வெற்றி பெறும் வாய்ப்புகளும் உள்ளன. அப்படி நடந்தால் அதன் பின் முல்லைப் பெரியாற்று அணை விவகாரத்தில் தமிழகம் எதையும் செய்ய முடியாது.
 
காவிரி பிரச்சினையாக இருந்தாலும்,  முல்லைப் பெரியாற்று அணை  விவகாரமாக இருந்தாலும்  தமிழகத்தை ஆளும் திராவிட மாடல் அரசு, அதன் சுய நலனுக்காக தமிழ்நாட்டின் நலன்களை கூட்டணிக் கட்சிகள் ஆளும் கர்நாடகத்திடமும், கேரளத்திடமும் தாரை வார்ப்பதையே  வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது. இதை அனுமதிக்க முடியாது. உடனடியாக உச்சநீதிமன்றத்தை அணுகி  பேபி அணையில் உள்ள மரங்களை வெட்டவும்,  அணைகளை வலுப்படுத்தும் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளவும் தமிழக அரசு அனுமதி பெற வேண்டும். அணையின் நீர்மட்டத்தை அடுத்த இரு ஆண்டுகளில் 152 அடியாக உயர்த்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தாமிரபரணி வெள்ளத்தை வேடிக்கை பார்க்க்கும் பொதுமக்கள்.. செல்பி வேண்டாம் என எச்சரிக்கை..!