தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தி.மு.க. மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறித்து பேசுவதில் ஆணவம் தெரிகிறது என்றும், அவருக்கு பின்னால் பா.ஜ.க. இருப்பதாக கருதுவதாகவும் பேரவை தலைவர் மு. அப்பாவு குற்றம் சாட்டியுள்ளார்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய அப்பாவு, "நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியுள்ளார். அவர் சினிமாவில் பேசுவதை போல பேசுகிறார். அவருக்குள் கொஞ்சம் ஆணவம் இருப்பதாக தெரிகிறது. மத்திய அரசு சிலரை அரசியல் கட்சிகள் தொடங்க வைத்து, மாநில அரசுகளுக்கு நெருக்கடி கொடுக்கிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நடிகை குஷ்பு, மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த் போஸ் ஆகியோரிடம் இது தொடர்பாக பேசியதாக பல செய்திகள் வெளியாகியுள்ளன" என்று கூறினார்.
"பிரதமரின் நெறிமுறைகளும், விஜய்யின் நெறிமுறைகளும் வேறு. பிரதமர் மற்றும் முதலமைச்சரைப்பற்றிப் பேசும்போது கண்ணியத்துடன் வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும்" என்றும் அவர் விஜய்யை எச்சரித்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தைக் கண்டு ஆளுங்கட்சி பயப்படுகிறதா? என்ற கேள்விக்கு, "பயப்படுபவர்களுக்குத்தான் பயம் வர வேண்டும். தமிழ்நாட்டில் யாரும் யாருக்கும் பயப்படவில்லை. தலைவா படப் பிரச்சனைக்காக கொடநாட்டில் மூன்று நாட்கள் காத்திருந்து காலில் விழுந்தவர்கள் நாங்கள் அல்ல" என்று காட்டமாக பதிலளித்தார்.