தர்மபுரி மாவட்டத்தில் யாத்திரை சென்ற பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை அங்கிருந்த தேவாலயம் ஒன்றிற்கு சென்றது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அது தொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் “என் மண் என் மக்கள்” என்ற பாத யாத்திரையை பல்வேறு கட்டங்களாக மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கடந்த ஜனவரி 8ம் தேதியன்று தர்மபுரி மாவட்டத்தில் யாத்திரை மேற்கொண்ட அவர் பி.பள்ளிபட்டியில் உள்ள புனித லூர்து அன்னை மாதா தேவாலயத்திற்கு சென்றார்.
அப்போது அவரை தடுத்த சில கிறிஸ்தவ வாலிபர்கள் அவர் மாதா சிலைக்கு மாலை அணிவிக்க கூடாது என்று கூறியதுடன், மணிப்பூர் கலவரம் குறித்தும் கேள்வி எழுப்பினர். ஆனால் தேவாலயம் என்பது பொது இடம் என்றும் தன்னை தடுத்து நிறுத்த அவர்களுக்கு உரிமை கிடையாது என்றும் அண்ணாமலை அந்த இளைஞர்களுடன் வாக்குவாதம் செய்தார்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் விரைந்து வந்த காவலர்கள் இளைஞர்களை அப்புறப்படுத்த, அண்ணாமலை தேவாலயம் சென்று மாதாவிற்கு மாலை அணிவித்தார். இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது கார்த்திக் என்பவர் அளித்த புகாரின் பேரில் பொம்மிடி காவல் நிலையத்தில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.