நேற்றைய தினம் பாஜகவின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிகழ்வின் போது, கட்சியின் மத்தியில் உரையாற்றிய அவர், கடந்த காலத்திலான அண்ணாமலையின் பேச்சை சுட்டிக்காட்டினார்.
முன்னதாக அண்ணாமலை, "ஆட்சி மாற்றம் நடந்தால் தான் செருப்பு அணிவேன்" என கூறியிருந்தார். இதனை குறிப்பிட்ட நயினார் நாகேந்திரன், “ஆட்சி மாற்றத்திற்கான அடிகளை அமித்ஷா ஏற்கனவே ஏற்படுத்திவிட்டார். எனவே இப்போது அவர் செருப்பு அணியலாம்” என்று தெரிவித்தார். இதனை வலியுறுத்தி அண்ணாமலையிடம் செருப்பை வழங்க, அண்ணாமலை அதை அணிந்துகொண்டார். இந்த நிகழ்வு பாஜகவினரிடையே ஒரு சிறப்பு நெகிழ்ச்சியாக அமைந்தது.
அதனைத் தொடர்ந்து பேசி நயினார் நாகேந்திரன்“அண்ணாமலை மற்றும் முந்தைய தலைவர்கள் கட்சியை கோபுரம் போல் கட்டி காத்து வந்தனர். நான் அதன் மேல் உள்ள கலசமாக இருந்து, கட்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்வேன்,” என்று தெரிவித்தார்.
மேலும், “அண்ணாமலை புயலாக செயல்பட்டார். ஆனால் நான் தென்றலாக பணியாற்ற உள்ளேன். பாஜகவை தமிழகத்தில் ஆட்சிக்கு கொண்டு வருவதே எனது உறுதி,” என்றும் கூறினார்.
திமுக அரசை கடுமையாக விமர்சித்த அவர், “ஊழல், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல், மதுபோதையில் மக்கள் பாதிக்கப்படுவது ஆகியவை மக்கள் விரோத ஆட்சி என்பதற்கான சான்றுகள். 2026ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் இந்த ஆட்சியை அகற்றுவோம். அதற்காக அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபடவேண்டும்,” என உறுதியுடன் கூறினார்.