சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியாளர்கள் மற்றும் பேராசிரியர் நியமனம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கடந்த சில வருடங்களாகவே அண்ணாமலை பல்கலைக் கழகம் கடுமையான நிதிநெருக்கடியைச் சந்தித்து வருகிறது. இந்த நிதிநெருக்கடிக்கு காரணமாக முன்னாள் துணைவேந்தர் எம் ராமசாமி மற்றும் பதிவாளர் ரத்தினசபாபதி ஆகியோர் மீது புகார் கூறப்பட்டது.
பணியாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் நியமனத்தில் பல்கலைக்கழக மானிய விதிகளைப் பின்பற்றாமல் தன்னிச்சையாக செயல்பட்டு பணியிடங்களை நிரப்பி அவர்களுக்கு அதிகமாக சம்பளம் கொடுத்ததாகவும், மேலும் பணியாளர்கள் நியமனத்திலும் ஊழல் செய்துள்ளதாகவும் புகார் எழுப்பப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த லஞ்ச ஒழிப்புத்துறை அவர்கள் இருவரும் ஊழல் செய்துள்ளதை தற்போது உறுதி செய்துள்ளனர்.
இந்த விசாரணையில் அதிர்ச்சியளிக்கும் மேலும் பல தகவல்களும் கிடைத்துள்ளன. தமிழக அரசு பல்கலைக்கழகத்துக்கு ஒதுக்கிய நிதியில் இருந்து 11 கோடி ரூபாயை தனியார் சுயநிதிப் பாடங்களுக்கு ஒதுக்கி ஊழலில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பணியாளர்கள் ஓய்வூதியத்திற்கான நிதியில் இருந்து 40 கோடி ரூபாயை ஊழல் செய்துள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.
எனவே அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட நிதிநெருக்கடிக்கு இவர்கள் இருவருமே காரணம் எனத் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து இவர்கள் இருவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.