அம்பேத்கர் குறித்து விவாதிக்க பாஜக அண்ணாமலை கமலாலயம் அழைத்தால் யாரும் செல்ல வேண்டாம் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் வெளியிடப்பட்ட பிரதமர் மோடி குறித்த புத்தகத்திற்கு முகவுரை எழுதிய இசையமைப்பாளர் இளையராஜா, பிரதமர் மோடியின் செயல்பாடுகளை அம்பேத்கருடன் ஒப்பிட்டு பேசிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து விசிகவினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பாஜகவினர் இளையராஜா பேசியது சரிதான் என வாதிட்டு வருகின்றனர். இதுகுறித்து சமீபத்தில் பேசிய பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை “பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டது சரியான செயலே. பிரதமர் மோடி அருந்ததியர் மக்களுக்காக பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்” என கூறிய அண்ணாமலை, அம்பேத்கர் குறித்து விவாதித்த திருமாவுக்கு சவால் விடுத்தார்.
ஆனால் அம்பேத்காரை குறித்து விவாதிப்பது என்றால் பிரதமருடன் விவாதிக்க தயார் என திருமாவளவன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அம்பேத்கார் குறித்து விவாதிக்க தயார் என இளஞ்சிறுத்தைகள் மாநில செயலாளர் சங்கதமிழன் அண்ணாமலையிடம் தெரிவித்தார்.
ஆனால், சங்கத்தமிழன் உள்ளிட்ட விசிகவினர் யாரும் அம்பேத்கார் குறித்து விவாதிக்க கமலாலயம் செல்ல வேண்டாம் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். அதற்கு பதிலாக ”டாக்டர் அம்பேத்கார் பேச்சும் எழுத்தும், அம்பேத்கர் எழுதிய இந்து மதத்தில் உள்ள புதிர்கள்” உள்ளிட்ட புத்தகங்களை அஞ்சல் மூலம் அண்ணாமலைக்கு விசிகவினர் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
அதற்கு பதிலளித்துள்ள அண்ணாமலை, திருவாசகம், இந்துத்துவ அம்பேத்கார் உள்ளிட்ட புத்தகங்களை தானும் பதிலுக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்துள்ளார்.