இந்தியத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீதான தாக்குதலுக்கு எதிராக போராட்டம் நடத்திவிட்டு திரும்பிய வி.சி.க. கட்சியினர், ஓர் வழக்கறிஞரை தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனையடுத்து, தமிழக முன்னாள் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை விசிகவை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அண்ணாமலை தனது X (முன்னர் ட்விட்டர்) பக்கத்தில், "விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் குண்டர்கள், காரை தட்டிய ஓட்டுநரை கேள்வி கேட்ட ஒரு வழக்கறிஞரை தாக்கியுள்ளனர்," என்று குற்றம் சாட்டியதோடு, சம்பவத்தில் ஈடுபட்ட காரில் திருமாவளவன் பயணித்ததாகவும் கூறினார்.
சமூக ஊடகங்களில் பரவும் வீடியோவில், ஒரு சிறிய மோதலுக்கு பிறகு ஸ்கூட்டரில் இருந்த நபர் தாக்குதலுக்குள்ளாவதை காண முடிகிறது. காவல்துறை தலையிட்டு அவரை மீட்பதும் பதிவாகியுள்ளது.
"தலைமை நீதிபதி மீதான தாக்குதலை கண்டித்துப் போராட்டத்தில் கலந்துகொண்டு திரும்பிய உடனேயே, திருமாவளவனின் குழுவினர் ஒரு வழக்கறிஞரை தாக்கியது முரண்பாடானது" என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில், தலைமை நீதிபதி கவாய் மீது நீதிமன்றத்தில் காலணி வீச முயன்ற சம்பவம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த பின்னணியிலேயே, இந்த வழக்கறிஞர் தாக்குதல் விவகாரத்தை அண்ணாமலை கடுமையாக சாடியுள்ளார்.