Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கையாலாகாத்தனத்தை மறைக்க காரணம் தேடுகிறது திமுக அரசு: அண்ணாமலை குற்றச்சாட்டு..!

Annamalai

Mahendran

, செவ்வாய், 18 ஜூன் 2024 (14:19 IST)
மே, ஜூன் இரண்டு மாதங்களுக்கும் வழங்கப்பட வேண்டிய பாமாயிலும், துவரம் பருப்பும் உடனடியாக வழங்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், தரமற்ற துவரம் பருப்பை அனுப்பிய நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், திமுக அரசை வலியுறுத்துகிறேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
திமுக கொண்டாட்டம், ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் திண்டாட்டம்
தேர்தல் நன்னடத்தை விதிகளைக் காரணம் காட்டி, ரேஷன் கடைகளில், கடந்த மே மாதம் வழங்கப்பட வேண்டிய துவரம் பருப்பு மற்றும் பாமாயிலை வழங்காமல் புறக்கணித்த திமுக அரசு, தற்போது இரண்டு மாதங்கள் கடந்தும், இன்னும் முழுமையாக அவற்றை பொதுமக்களுக்கு வழங்கவில்லை என்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
 
இந்த ஆண்டு ஜனவரி மாதம், நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி, ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, மற்றும் பாமாயிலை நிறுத்தப் போவதாகச் செய்திகள் வெளியாகின. பொதுமக்களின் கடும் எதிர்ப்பை அடுத்து, அந்த முடிவை திமுக அரசு கைவிட்டது. ரேஷன் கடைகளில், ஒரு கிலோ உளுத்தம்பருப்பு மற்றும் சர்க்கரை வழங்கப்படும் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுக, மூன்று ஆண்டுகள் கடந்தும், அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் துவரம் பருப்பு மற்றும் பாமாயிலையும் நிறுத்த திமுக அரசு முயல்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.
 
தேர்தல் விதிகளைக் காரணம் காட்டும் திமுக அரசு, அவை நடைமுறைக்கு வருவதற்குப் பல நாட்கள் முன்னதாக, இந்த ஆண்டு பிப்ரவரி மாதமே, 60,000 டன் துவரம் பருப்பு மற்றும் 6 கோடி லிட்டர் பாமாயில் கொள்முதல் செய்ய வாணிப கழகம் மூலம் டெண்டர் கோரியிருந்தது என்ன ஆனது?
 
பல மாவட்டங்களில், பல நூறு டன் அளவிலான தரமற்ற துவரம் பருப்பு, திரும்பி அனுப்பப்படுவதாகச் செய்திகள் வெளிவந்தன. அந்த நிறுவனங்கள் மீது திமுக அரசு இதுவரை எடுத்த நடவடிக்கை என்ன?
 
தங்கள் கையாலாகாத்தனத்தை மறைக்கக் காரணங்கள் தேடுவதை நிறுத்தி விட்டு, உடனடியாக, ரேஷன் கடைகளில், பொதுமக்களுக்கு, மே, ஜூன் இரண்டு மாதங்களுக்கும் வழங்கப்பட வேண்டிய பாமாயிலும், துவரம் பருப்பும் உடனடியாக வழங்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், தரமற்ற துவரம் பருப்பை அனுப்பிய நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
 
இவ்வாறு அண்ணாமலை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பணிப்பெண் கடத்தல் வழக்கு..! பவானி ரேவண்ணாவிற்கு முன்ஜாமீன்..!!