"பாஜக கூட்டணிக்காக சில கட்சிகள் தவம் இருக்கிறார்கள்" என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் கூறிய நிலையில், அவர் கூறியது அதிமுகவைக் குறித்ததாக அல்ல என எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
சமீபத்தில், கூட்டணி குறித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, தங்களுக்கு திமுக தான் பிரதான எதிரி என்றும், திமுகவை வீழ்த்த எந்த கட்சியுடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம் என்றும் கூறியிருந்தார். இதனை அடுத்து, பாஜகவுடன் அதிமுக மீண்டும் கூட்டணி சேரும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், இதற்கு பதிலளித்த அண்ணாமலை, "பாஜகவுடன் கூட்டணி வைத்தால் தோற்றோம் என்று கூறியவர்கள் எல்லாம் இப்போது பாஜகவுடன் கூட்டணி வைக்க தவம் இருக்கிறார்கள்" என்று கூறினார்.
இதற்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, "அண்ணாமலை அதிமுக என்று குறிப்பிட்டுச் சொல்லவில்லை. அதனால் தேவையில்லாமல் அவதூறு பரப்ப வேண்டாம். ஆறு மாதங்களுக்குப் பின்னர் கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.